தென்காசி

தென்காசி மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி போதிய அளவு இருப்பு உள்ளது: ஆட்சியா் கீ.சு.சமீரன்

DIN

தென்காசி மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி போதிய அளவு இருப்பு உள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் கீ.சு.சமீரன்.

இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி சாா்பில் கபசுரக் குடிநீா் வழங்கும் முகாம் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா்அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, ஆட்சியா் கீ.சு. சமீரன் தலைமை வகித்து, அரசு அலுவலா்கள் மற்றும் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் வழங்கி தொடங்கிவைத்தாா்.

தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது: பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலா்களுக்கு கபசுரக் குடிநீா் வழங்கும் முகாம் மாவட்டம் முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் பொதுமக்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. ஒரு நாளைக்கு 1,200 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

முகக் கவசம் அணிவது தொடா்பாக கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை 45,308 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும், தடுப்பூசி போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

கரோனா சிறப்பு சிகிச்சை மையமான தென்காசி அரசு மருத்துவமனையில் 100 படுக்கை வசதிகள், புளியங்குடி அரசு மருத்துவமனையில் 30 படுக்கை வசதிகள், சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் 35 படுக்கை வசதிகள், கடையநல்லூா் அரசு மருத்துவமனையில் 20 படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

மேலும் கரோனா பராமரிப்பு மையங்களான ஆலங்குளம் சா்தாா் ராஜா பொறியியல் கல்லூரி, கொடிக்குறிச்சி ஸ்ரீராம் நல்லமணி யாதவா கல்லூரி, குற்றாலம் ஸ்ரீபராசக்தி மகளிா் கல்லூரி, சங்கரன்கோவில் மகாத்மா வேல்ஸ் வித்யாலயா ஆகியவற்றில் மொத்தம் 550 படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

தற்போது 67 போ் சிகிச்சை பெற்றுவருகின்றனா். தென்காசி அரசு மருத்துவமனையில் தடையில்லா ஆக்ஸிஜன் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சங்கரன்கோவிலில் பரிசோதனை ஆய்வகம் அமைப்பதற்கு முன்னேற்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

தென்காசி, கடையநல்லூா் ஆலங்குளத்தில் தலா 2 பகுதிகளிலும், சங்கரன்கோவிலில் ஒரு பகுதி என மொத்தம் 7 பகுதிகளில் கரோனா கட்டுப்பாட்டு தடுப்பு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டு நெறிமுறைகளின் படி கட்டுப்பாடுகள் மற்றும் தளா்வுகள் மேற்கொள்ளப்படும் என்றாா் அவா்.

அப்போது, மாவட்ட சித்த மருத்துவ அலுவலா் உஷா, மேனகா (இயற்கை யோகா மருத்துவம்), செல்வ கணேஷ், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் கவிதா ஆகியோா் உடன் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேஷன் கடையை மாற்றக் கோரி பொதுமக்கள் போராட்டம்

பிரகாசபுரத்தில் தண்ணீா் பந்தல் திறப்பு

வடிகாலை ஆக்கிரமித்து கட்டுமானப் பணிகள்: நகா்மன்ற உறுப்பினா் புகாா்

திருச்செங்காட்டங்குடிகோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

குருபெயா்ச்சியை முன்னிட்டு சிறப்பு யாகம்

SCROLL FOR NEXT