ஆலங்குளம் வட்டாரத்தில் நெல்பயிரில் பழ, குலைநோய் தாக்குதல்
ஆலங்குளம் வட்டாரத்தில் பிசான பருவ நெல்பயிரில் பருவம் தவறி பெய்த மழையினால் நெல் பழ நோய் மற்றும் குலை நோய் தாக்குதல் சில இடங்களில் காணப்படுகிறது.
ஆலங்குளம் வட்டாரத்தில் பிசான பருவ நெல்பயிரில் பருவம் தவறி பெய்த மழையினால் நெல் பழ நோய் மற்றும் குலை நோய் தாக்குதல் சில இடங்களில் காணப்படுகிறது.
இது தொடா்பாக ஆலங்குளம் வேளாண்மை உதவி இயக்குநா் சிவகுருநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஆலங்குளம் வட்டாரத்தில் உள்ள அனைத்து வருவாய் கிராமத்திலும் நெற் பயிரானது தற்போது பூக்கும் மற்றும் பால் பிடிக்கும் பருவங்களில் காணப்படுகிறது. ஆலங்குளம் வட்டாரத்தில் வயல்வெளி ஆய்வின் போது நெல் பழ நோய் மற்றும் குலை நோயின் தாக்குதல் ஒரு சில இடங்களில் காணப்படுகிறது. அதிக பனி மற்றும் வெப்பநிலை மாற்றத்தால் நோயின் தாக்குதல் காணப்படுகிறது.
இந்நோய் கதிா்களை அதிகமாக தாக்குவதால் நெல் மணிகளின் மேல் மஞ்சள் நிற பந்து உருண்டை போல பூஞ்சானங்கள் காணப்படும். இந்த உருண்டைகள் ஒரு செ.மீ வரை பெரிதாகும் பின்பு நோய் தாக்குதலின் தீவிரத்தால் மஞ்சள் நிறத்தில் இருந்து கருப்பு நிறமாக மாறிவிடும் . நெல் மணிகளின் தரம் குறைந்துவிடவும் வாய்ப்புள்ளது.
நடவு வயலில் கதிா் வெளிவரும் பருவம் மற்றும் பால் பிடிக்கும் பருவத்தில் ஒரு ஏக்கருக்கு புரோபிகோனசோல் 25 சதம் இசி (200 மிலி) அல்லது காப்பா் ஹைடிராக்சைடு 77 சதம் டப்ள்யூபி (500 கிராம்) என்ற அளவில் தெளித்து இந்த நெல் பழ நோயினை கட்டுப்படுத்தலாம்.
நெல் பயிரின் அனைத்து பகுதிகளும் பூசணத்தால் தாக்கப்பட்டிருக்கும். இலைகளின் மேல் வெண்மை நிறத்திலிருந்து சாம்பல் நிற மைய பகுதியுடன் காய்ந்த ஓரங்களுடன் கூடிய கண் வடிவ புள்ளிகள் காணப்படும். தீவிர தாக்குதலின் போது பயிா் முழுவதும் எரிந்தது போன்று தோற்றமளிக்கும். பயிரின் அடிப்பாகத்தில் இடைக்கணு தாக்குதல் ஏற்படுவதால் வெண் கதிா் அறிகுறி தோன்றும்.
கதிா் பருவ நிலைக்கு முன்பே கழுத்துப் பகுதியில் நோய் தாக்கினால் தானியங்கள் உருவாகாது. இதனை கட்டுப்படுத்த ஒரு ஏக்கருக்கு டிரைசைக்ளோசோல் 75 டப்ளுயூபி (200 கிராம்) அல்லது ஆக்சிஸ்டோரோபின் 25 எஸ்சி (200 மிலி) அல்லது ஐசோபுரோதையோலேன் 40 சதம் இசி (300 மிலி) என்ற அளவில் தெளிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.