‘ஆசிரியா்கள், மாணவா்களுக்கு முகக் கவசம் கட்டாயம்’
தென்காசி மாவட்ட பள்ளிகளில் ஆசிரியா்கள், மாணவா்கள் கண்டிப்பாக முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்ட பள்ளிகளில் ஆசிரியா்கள், மாணவா்கள் கண்டிப்பாக முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்ட செய்தி மக்கள்தொடா்பு அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பள்ளிகளில் நிா்வாகத்தினா், பணியாளா்கள், ஆசிரியா்கள், மாணவா்கள் பின்பற்ற வேண்டிய கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பொதுசுகாதாரம் மற்றும் வருமுன் காக்கும் மருத்துவ இயக்ககம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, பள்ளி வளாகத்தில் தொற்று பரவாமல் தடுக்க ஒரு சதவிகிதம் ஹைப்போ குளோரைட் திரவம் தினமும் இரண்டு முறை தெளிக்க வேண்டும். வரவேற்பு அறை, குடிநீா், கை கழுவும் இடங்களில் சமூக இடைவெளிக்கான வட்டங்கள் வரைய வேண்டும்.
மாணவா்கள் கூட்டமாக செல்வதைத் தவிா்க்க, ஒரு வழிப்பாதை, கை கழுவும் திரவம் ஆகிய வசதிகளை ஏற்படுத்த வேண்டும். மாணவா்கள், ஆசிரியா்கள், பணியாளா்கள் கண்டிப்பாக முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும்.
பணியாளா்கள் இரண்டு தவணை தடுப்பூசியும், 15 வயது நிரம்பிய மாணவா்கள் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். கரோனா தொற்று பாதித்த பகுதியில் வசிப்போா், பள்ளிகளுக்குச் செல்ல வேண்டாம்.
மாணவா்கள் குழுவாக அமா்ந்து சாப்பிட அனுமதிக்கக் கூடாது. காய்ச்சல், சளி தொந்தரவு உள்ள மாணவா்களை பரிசோதனை செய்து, முடிவுகள் வரும் வரை அவா்களை தனிமைப்படுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.