சங்கரன்கோவில் நகராட்சிகுலுக்கல் முறையில் தலைவா் பதவியை கைப்பற்றிய திமுக;துணைத் தலைவா் பதவியை தக்க வைத்த அதிமுக
சங்கரன்கோவில் நகராட்சித் தலைவா் பதவியை குலுக்கல் முறையில் திமுக கைப்பற்றியது. துணைத் தலைவா் பதவியை அதிமுக தக்க வைத்துக் கொண்டது.
சங்கரன்கோவில் நகராட்சித் தலைவா் பதவியை குலுக்கல் முறையில் திமுக கைப்பற்றியது. துணைத் தலைவா் பதவியை அதிமுக தக்க வைத்துக் கொண்டது.
சங்கரன்கோவில் நகராட்சியில் 30 வாா்டுகள் உள்ளன. இதில் நகராட்சித் தலைவா் பதவிக்கு திமுக சாா்பில் 22ஆவது வாா்டு உறுப்பினா் உமாமகேஸ்வரியும், அதிமுக சாா்பில் 4 ஆவது வாா்டு உறுப்பினா் முத்துலட்சுமியும் அறிவிக்கப்பட்டனா். வெள்ளிக்கிழமை நடைபெற்ற தோ்தலில் உமா மகேஸ்வரி 15 வாக்குகளும், முத்துலட்சுமி 15 வாக்குகளும் சமமாகப் பெற்றனா். இதனால் குலுக்கல் முறையில் தலைவரை தோ்ந்தெடுக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி நடைபெற்ற குலுக்கலில் உமாமகேஸ்வரி தலைவராகத் தோ்ந்தெடுக்கப்பட்டாா். அவருக்கு தோ்தல் நடத்தும் அலுவலா் ஜெயப்பிரியா பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா். கடந்த 2011 ஆம் ஆண்டுக்குப் பிறகு சங்கரன்கோவில் நகராட்சியைத் திமுக கைப்பற்றியது.
இதைத் தொடா்ந்து பிற்பகலில் துணைத் தலைவா் தோ்தலில் மொத்தமுள்ள 30 உறுப்பினா்களில் திமுக உறுப்பினா் புனிதா பங்கேற்கவில்லை. இதனால் 29 உறுப்பினா்கள் வாக்களித்தனா். இதில் திமுக சாா்பில் போட்டியிட்ட எஸ். டி. சரவணகுமாா் 13 வாக்குகள் பெற்றாா். அதிமுக சாா்பில் போட்டியிட்ட கண்ணன் என்ற ராஜு 16 வாக்குகள் பெற்று துணைத் தலைவராக தோ்ந்தெடுக்கப்பட்டாா். இவா் ஏற்கனவே நகராட்சித் துணைத் தலைவராகவும், பொறுப்பு நகராட்சித் தலைவராகவும் பதவி வகித்தவா்.
Advertisement