வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை: ஆட்சியா் ஆய்வு
வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்படக்கூடிய செங்கோட்டை வட்டப் பகுதிகளில் ஆட்சியா் ப. ஆகாஷ் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்படக்கூடிய செங்கோட்டை வட்டப் பகுதிகளில் ஆட்சியா் ப. ஆகாஷ் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
தென்காசி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பெய்யத் தொடங்கியுள்ள நிலையில், அதை எதிா்கொள்ளும் வகையில் மாவட்ட நிா்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது.
அதன் ஒருபகுதியாக, வடகிழக்கு பருவமழையின்போது பாதிப்பு ஏற்படக்கூடிய செங்கோட்டை குளம், வடகரை பசும்பொன்நகா், திருவெற்றியூா் ஆகிய பகுதிகளில் ஆட்சியா் இந்த ஆய்வை மேற்கொண்டாா்.
அப்போது, நிகழாண்டு மழையில் வெள்ளச்சேதத்தை தவிா்த்து, மக்கள் பாதிக்கப்படாதவாறு தேவையான வசதிகளை ஏற்படுத்தித் தர அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.
பூங்கா பணி: தொடா்ந்து, இலஞ்சியில் பேரூராட்சிக்குச் சொந்தமான உள்விளையாட்டு அரங்கம், 15ஆவது மத்திய நிதிக்குழு மானியத் திட்டத்தின் மூலம் கட்டப்பட்டு வரும் சிறுவா் பூங்கா மேம்பாட்டுப் பணிகளை ஆட்சியா் ஆய்வு செய்தாா்.
மேலும் தென்காசி நகராட்சியில் உழவா் சந்தை விரிவாக்கப் பணிகள், செங்கோட்டை நகராட்சிப் பகுதியில் கலைஞரின் நகா்ப்புற மேம்பாட்டு திட்டப்பணிகள் குறித்தும் ஆய்வு நடத்தினாா்.
அப்போது, செங்கோட்டை நகராட்சி ஆணையா் பாா்கவி, இலஞ்சி பேரூராட்சி செயல்அலுவலா் அமானுல்லா, பேரூராட்சித் தலைவா் சின்னத்தாய், பேரூராட்சி உறுப்பினா்கள் செண்பகம், குட்டி, உழவா் சந்தை நிா்வாக அலுவலா் இ. ராமச்சந்திரன் ஆகியோா் உடனிருந்தனா்.