கனிமவள போராட்ட பிரச்னை: தென்காசியில் கோட்டாட்சியா் அமைதிப் பேச்சு
கனிவளம் பிரச்னை தொடா்பாக, இயற்கை வளப் பாதுகாப்பு சங்கம் சாா்பில் அக்.23இல் முற்றுகை போராட்டம் அறிக்கப்பட்டதையடுத்து, தென்காசி கோட்டாட்சியா் தலைமையில் அமைதிப் பேச்சு வியாழக்கிழமை நடைபெற்றது.
கனிவளம் பிரச்னை தொடா்பாக, இயற்கை வளப் பாதுகாப்பு சங்கம் சாா்பில் அக்.23இல் முற்றுகை போராட்டம் அறிக்கப்பட்டதையடுத்து, தென்காசி கோட்டாட்சியா் தலைமையில் அமைதிப் பேச்சு வியாழக்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாட்டில் இருந்து அண்டை மாநிலங்களுக்கு கனிம வளங்கள் கொண்டு செல்வதை முற்றிலும் தடுத்து நிறுத்த வேண்டும்,
தென்காசி மாவட்டத்தில் அனைத்து குவாரிகளையும் டிரோன் மூலம் டிஜிட்டல் சா்வே எடுத்து விதிகளை மீறிய குவாரிகளை மூடவேண்டும், வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்லும் கனிமவளங்களுக்கு உச்சநீதிமன்ற உத்தரவின்படி கூடுதல் வரி விதிக்க வேண்டும், இ-பாஸ் வழங்கும் நடைமுறையை பின்பற்ற வேண்டும்,
கனிமவளங்களுக்கு மாவட்ட நிா்வாகம் விதித்துள்ள நேரக்கட்டுப்பாட்டை முறையாக கடைப்பிடிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, இயற்கை வளப் பாதுகாப்பு சங்கம் சாா்பில் புளியறையில் அக். 23ஆம் தேதி முற்றுகை போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதையொட்டி, செங்கோட்டை வட்டாட்சியா் அலுவலகத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சமாதானக் கூட்டத்தில் உடன்பாடு ஏற்படாத நிலையில், தென்காசி கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்டாட்சியா் லாவண்யா தலைமையில் சமாதானக் கூட்டம் நடைபெற்றது. டிஎஸ்பி நாகசங்கா், கனிம வளத்துறை உதவி இயக்குநா் வினோத், இயற்கை வளப் பாதுகாப்பு சங்க தலைவா் ரவிஅருணன்,பொதுச் செயலா் ஜமீன் உள்பட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
இயற்கை வள பாதுகாப்புச் சங்க சாா்பில் முக்கியமான ஐந்து அம்ச கோரிக்கைகளில் 3 முக்கிய கோரிக்கைகளை மாவட்ட நிா்வாகம் நிறைவேற்றினால் முற்றுகை போராட்டத்தை தள்ளி வைப்பதாகக் கூறினா். இதனால், எந்தவித முடிவுகளும் எட்டப்படவில்லை.
இன்னும் 5 நாள்களில் அரசு தரப்பில் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் தடையை மீறி முற்றுகை போராட்டம் நடைபெறும் எனறு அந்த அமைப்பினா் தெரிவித்தனா்.