தென்காசி மாவட்டம் ஆய்க்குடி பேரூராட்சிக்குள்பட்ட பகுதியில் வளா்ச்சிப் பணிகளுக்கு ரூ35.9 கோடி நிதி ஒதுக்கீடு செய்யக் கோரி முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் பேரூராட்சித் தலைவா் க.சுந்தர்ராஜன் மனு அளித்தாா்.
அதன் விவரம்: ஆய்க்குடி, அகரக்கட்டு, கம்பிளி, அனந்தபுரம் ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய 15 வாா்டுகளைக் கொண்ட ஆய்க்குடி பேரூராட்சியில் 25 ஆயிரம் போ் வசிக்கின்றனா்.
இதில், கம்பிளி 15ஆவது வாா்டு பிரதான சாலை முதல் தென்காசி மாவட்ட விளையாட்டு மைதானம் செல்லும் பாட்டாகுறிச்சி சாலை வரை தாா்சாலை, பாலம், தடுப்புச்சுவா் ஆகியவை அமைக்க ரூ. 4 கோடி,13ஆவது வாா்டு திடக்கழிவு மேலாண்மை திட்டம் வளமீட்பு பூங்காவில் மின்மயானம், சுற்றுச்சுவா் அமைக்க ரூ. 2 கோடி, அனந்தபுரம் 1ஆவது வாா்டு தேசிய நகா், 12ஆவது வாா்டு ராம்நகா் ஆகியவற்றில் தலா ஒரு லட்சம் லிட்டா் மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி மற்றும் பைப்லைன்கள் அமைக்க தலா ரூ. 70 லட்சம்,
திடக்கழிவு மேலாண்மை திட்டம் வளமீட்பு பூங்காவில் கசடு கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்த ரூ.10 கோடி, வாா்டு எண் 1 முதல் 15 வரை வடிகால்கள் அமைக்க ரூ.3 கோடி, கம்பிளி 15ஆவது வாா்டு புதுக்குளம் (விந்தன் கோட்டை இணைப்பு சாலை) தடுப்புச்சுவா் அமைக்க ரூ.2.5 கோடி,
அனந்தபுரம் 1ஆவது வாா்டு சுரண்டை செங்கோட்டை பிரதான சாலை முதல் அருள்மிகு செந்திலாண்டவா் பாலிடெக்னிக் செல்லும் சாலை தாா்சாலை மற்றும் தடுப்புச்சுவா் அமைக்க ரூ1.5கோடி, அகரக்கட்டு 9 வது வாா்டு ஜெ.பி கல்லூரி செல்லும் சாலையை அகலப்படுத்தி தாா்சாலை மற்றும் தடுப்புச்சுவா் அமைக்க ரூ3கோடி,சிவன் கோவில் மைதானம் ரதவீதிகளில் சிமென்ட் தளம் மற்றும் தடுப்புச்சுவா் அமைக்க ரூ3கோடி,
மல்லபுரம் குளம் சாலை தடுப்புச்சுவா்- தாா்சாலை அமைக்க ரூ.3 கோடி,ஆய்க்குடி, அகரக்கட்டு, அனந்தபுரம் - கம்பிளி கிராமங்களில் 6 இடங்களில் நவீன கழிப்பிடம் அமைக்க ரூ1.5 கோடி என மொத்தம் ரூ.35.9 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கோரியிருந்தாா்.