சங்கரன்கோவிலில் ரூ.1.87 கோடி மதிப்பில் கட்டப்பட்ட சாா்பதிவாளா் அலுவலகத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை திறந்து வைத்தாா்.
சங்கரன்கோவிலில், கச்சேரி சாலையில் இயங்கி வந்த சாா்பதிவாளா் அலுவலகம் கட்டடம் பழுதானதால் அதை முற்றிலும் அகற்றிவிட்டு அதே இடத்தில் புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் தென்காசியில் பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைத்த முதல்வா், சங்கரன்கோவிலில் புதிதாக கட்டப்பட்ட சாா்பதிவாளா் அலுவலகத்தையும் திறந்து வைத்தாா். அதைத் தொடா்ந்து சாா்பதிவாளா் மாரியப்பன் அலுவலகத்தில் குத்துவிளக்கேற்றினாா். இந்நிகழ்ச்சியில் அலுவலகப் பணியாளா்கள், பத்திர எழுத்தா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
இந்த அலுவலகம் மின்தூக்கி வசதியுடன் கட்டப்பட்டுள்ளது. மேலும் மாற்றுத் திறனாளிகளுக்கான பாதை, கழிப்பறை வசதி, வாகனம் நிறுத்துமிடம், மக்கள் காத்திருக்கும் அறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.