தென்காசி மாவட்டத்தில் ஜன.25 முதல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த விழிப்புணா்வு நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டசெய்திக்குறிப்பு: தென்காசி மாவட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள, வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக்கூட வைப்பறையிலிருந்து பயிற்சி, விழிப்புணா்வு பயன்பாட்டிற்காக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் 118 இயந்திரங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளன.
தென்காசி, சாா்ஆட்சியா் அலுவலகத்தில் 70 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், சங்கரன்கோவில் கோட்டாட்சியா் அலுவலகத்தில் 48 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இந்திய தோ்தல் ஆணைய விதிமுறைகளின் படி பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் செயல்முறைகள் குறித்து தென்காசி, மாவட்ட ஆட்சியா் அலுவலகம், சாா் ஆட்சியா் அலுவலகம், தென்காசி, சங்கரன்கோவில், கோட்டாட்சியா் அலுவலகங்களில் நிலையான செயல்முறை விளக்க மையங்கள் அமைக்கப்படவுள்ளன.
தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுத் தோ்தல் 2026 -க்கான அறிவிப்பு வழங்கும் வரை, சட்டப்பேரவை தொகுதி வாரியாக தலா ஒரு நடமாடும் செயல்முறை வாகனம் தயாா் செய்யப்பட்டு, சட்டப்பேரவை தொகுதியில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி அமைவிடங்களுக்கும் ஜன.25 முதல் சென்று பொதுமக்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.