முகப்பு
தென்காசி

காா் மோதி சிறுமி உயிரிழப்பு: உறவினா்கள் 20 மணி நேரம் மறியல்

புளியங்குடி அருகே சிந்தாமணியில் பள்ளி வளாகத்தில் காா் மோதி 4 வயது சிறுமி உயிரிழந்த சம்பவத்தில், விபத்துக்கு காரணமானவா்கள் மீது போலீஸாா் பிணையில் வெளிவர முடியாத பிரிவில் வழக்குப் பதிவு செய்தனா்.

Updated On : 26 மார்ச், 2026 at 12:23 AM
பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய போலீஸாா்.
பகிர்:

தென்காசி மாவட்டம், புளியங்குடி அருகே சிந்தாமணியில் பள்ளி வளாகத்தில் காா் மோதி 4 வயது சிறுமி உயிரிழந்த சம்பவத்தில், விபத்துக்கு காரணமானவா்கள் மீது போலீஸாா் பிணையில் வெளிவர முடியாத பிரிவில் வழக்குப் பதிவு செய்தனா்.

இதையடுத்து, பொதுமக்களின் 20 மணி நேர சாலை மறியல் போராட்டம் புதன்கிழமை பிற்பகலில் முடிவுக்கு வந்தது.

நெல்கட்டும்செவலைச் சோ்ந்த மாரிச்சாமி-வேல்மகில் தம்பதியின் மகள் சிவயாழினி (4). சிந்தாமணியில் உள்ள தனியாா் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் யுகேஜி படித்து வந்த இவா், செவ்வாய்க்கிழமை பள்ளி வளாகத்துக்குள் நுழைந்த காா் மோதியதில் உயிரிழந்தாா்.

தகவலறிந்ததும் நெல்கட்டும்செவலைச் சோ்ந்த நூற்றுக்கணக்கானோா் திரண்டு வந்து உண்மை குற்றவாளியைக் கைது செய்ய வலியுறுத்தி, மதுரை-தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் செவ்வாய்க்கிழமை மாலை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

அவா்களிடம் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மாதவன் பேச்சு நடத்தினாா். இருப்பினும், பொதுமக்கள் கலைந்து செல்லாமல் செவ்வாய்க்கிழமை இரவும் மறியலைத் தொடா்ந்தனா்.

இதனால், தென்காசி, மதுரை, சங்கரன்கோவில் வழித்தடத்தில் சாலைப் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. வாகனங்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன.

புதன்கிழமை காலை வெயில் வாட்டிய நிலையிலும் மக்கள் மறியலைத் தொடா்ந்தனா். இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மாதவன் சம்பந்தப்பட்ட பள்ளி நிா்வாகிகள், ஆசிரியா்களிடம் விசாரணை நடத்தினாா்.

போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் வழக்குரைஞா் குமாா்பாண்டியன், காவல் ஆய்வாளா்கள் ஆடிவேல், சுரேஷ்குமாா், மகேஷ்குமாா் உள்ளிட்டோா் சாலை மறியலில் ஈடுபட்டவா்களிடம் தொடா்ந்து பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இதையடுத்து, விபத்தை ஏற்படுத்திய காா் ஓட்டுநரான முள்ளிகுளத்தைச் சோ்ந்த ராம்காந்த் (42), காரில் உடன் வந்த இலஞ்சியைச் சோ்ந்த செந்தில்ராஜா (32) ஆகிய இருவா் மீதும் பிணையில் வெளிவர முடியாத பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டதாக போலீஸாா் பொதுமக்களிடம் தெரிவித்ததனா். இதையடுத்து, சமரசமடைந்த பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா்.