முகப்பு
திருநெல்வேலி

"பூரண மதுவிலக்கு: வைகோ தலைமையில் டிச.12 நடைபயணம்'

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை வலியுறுத்தி வரும் டிசம்பர்

Updated On : 2 ஜனவரி, 2024 at 7:07 PM
பகிர்:

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை வலியுறுத்தி வரும் டிசம்பர் 12-ம்  தேதி மதிமுக பொதுச்செயலர் வைகோ தலைமையில் நடைபயணம் மேற்கொள்ளப்படவுள்ளதாக, அக் கட்சியின் கொள்கை விளக்க அணிச் செயலர் நாஞ்சில் சம்பத் தெரிவித்தார்.

பூரண மதுவிலக்கை வலியுறுத்தி திருநெல்வேலி மாநகர், புறநகர் மாவட்ட மதிமுக  சார்பில் பாளையங்கோட்டை ஜவாஹர் மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்துக்கு தலைமை வகித்த நாஞ்சில் சம்பத் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழக அளவில் நாள்தோறும் 49 லட்சம் பேர் மதுபானக் கடைகளுக்குச்  சென்று வருவது தெரியவந்துள்ளது.

இதனால் அழிவின் விளிம்பில் தமிழர்கள் இருக்கிறார்கள்.  அவர்களைக் காப்பாற்ற மதுக்கடைகளை அடைக்க வேண்டும்.

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி, டிசம்பர் 12-ம் தேதி  திருநெல்வேலி மாவட்டம் உவரியிலிருந்து வைகோ தலைமையில் நடைபயணம்  மேற்கொள்ளப்படவுள்ளது.

இங்கிருந்து தொடங்கும் நடைபயணம் இயேசு பிறப்பு நாளான டிசம்பர் 25-ம் தேதி மதுரையில் நிறைவடையும். தமிழகத்தின் பல்வேறு  பகுதிகளில் இருந்தும் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி நடைபயணம் மேற்கொள்ளும் கட்சியினர், அன்று மதுரையில் பயணத்தை நிறைவு செய்வார்கள் என்றார் அவர்.

போராட்டத்தில் மதிமுக ஆட்சிமன்றக் குழு உறுப்பினர்  சதன்திருமலைக்குமார், ஆலோசனைக் குழு உறுப்பினர் கே.எம்.ஏ. நிஜாம், தேர்தல் பணிச் செயலர் சி.ஏ.ஆர். குட்டி என்ற சண்முகசுந்தரம், மாநில மாணவரணிச் செயலர் தி.மு. ராஜேந்திரன்,  மாநில இலக்கிய அணித் தலைவர் மதுரா, மாவட்ட அவைத்தலைவர் எஸ்.என். சுப்பையா, மாவட்டப் பொருளாளர் ரைமண்ட், மாவட்ட துணைச் செயலர் மின்னல்  முகமது அலி, மாநில நிர்வாகிகள் சுதர்சன், கல்லத்தியான், சணமுகவேல், அணிகளின் நிர்வாகிகள் அருள்வின் ரோட்ரிகோ, விஜயகுமார் பாக்கியம், அகஸ்டின் பெர்னாண்டஸ், உசேன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

துண்டு பிரசுரம் விநியோகம்: பாளையங்கோட்டை வட்டார ஐக்கிய ஜனதாதளம் சார்பில்  அதன் தலைவர் எஸ். கந்தசாமிபிள்ளை தலைமையில் பூரண மதுவிலக்கை வலியுறுத்தி துண்டு பிரசுரங்கள் செவ்வாய்க்கிழமை விநியோகம் செய்யப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.