ஓய்வுபெற்ற மாநகராட்சி ஊழியரிடம் ரூ. 2 லட்சம் திருட்டு
திருநெல்வேலியில் ஓய்வுபெற்ற மாநகராட்சி ஊழியரிடம் ரூ. 2 லட்சத்தை திருடிச் சென்ற நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்
திருநெல்வேலியில் ஓய்வுபெற்ற மாநகராட்சி ஊழியரிடம் ரூ. 2 லட்சத்தை திருடிச் சென்ற நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
பாளை. மகாராஜநகரைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (68). மாநகராட்சி ஊழியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவர், வெள்ளிக்கிழமை திருநெல்வேலி சந்திப்பில் உள்ள ஒரு வங்கியில் ரூ. 2 லட்சம் பணத்தை எடுத்துள்ளார்.
பின்னர் அந்தப் பணத்தை தனது மொபட்டில் சீட்டுக்கு அடியில் உள்ள பெட்டியில் வைத்தாராம். இந்நிலையில் திடீரென அவரது மொபட் டயர் பஞ்சரானதாம். இதையடுத்து மொபட்டை அங்கேயே நிறுத்திவிட்டு, பஞ்சர் ஒட்டுவதற்கான நபரை தேடி சென்றாராம். திரும்பி வந்து பார்த்தபோது, மொபட்டில் வைதிருந்த ரூ. 2 லட்சத்தை காணவில்லையாம். அதற்குள் மர்ம நபர்கள் பணத்தை திருடிச் சென்றுவிட்டனர்.
இதுகுறித்து அவர் திருநெல்வேலி சந்திப்பு குற்றப்பிரிவு போலீஸில் புகார் செய்தார். அதன்பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதியவரிடம் திருட்டு: இதேபோல் பாளையங்கோட்டையில் முதியவரிடம் ரூ. 50 ஆயிரம் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.
பாளை. பரதர் தெருவைச் சேர்ந்தவர் பரமசிவன் (65). இவர், வெள்ளிக்கிழமை பாளையங்கோட்டையில் உள்ள ஒரு வங்கியில் இருந்து ரூ. 50 ஆயிரம் பணத்தை எடுத்தாராம். அந்த பணத்தை தனது இருசக்கர வாகனத்தில் வைத்திருந்தாராம்.
இந்நிலையில் இருசக்கர வாகனத்தை சாலையோரம் நிறுத்திவிட்டு, டீ குடிக்க சென்றாராம். திரும்பி வந்து பார்த்தபோது பணத்தை காணவில்லையாம்.