முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீடுத் திட்டத்தின் கீழ் திருநெல்வேலி மாவட்டத்தில் 4 அரசு மருத்துவமனைகள், 13 தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அனைத்து மக்களும் உலக தரத்தில் மருத்துவ சேவையை பெறும் வகையில் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. ஆண்டு வருமானம் ரூ. 72 ஆயிரத்திற்கு கீழ் உள்ள அனைத்து குடும்பங்களும் இத்திட்டத்தின் மூலம் உயர் சிகிச்சை பெறலாம். இந்த காப்பீடுத் திட்டத்தில் ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு ரூ. 1 லட்சம் வீதம் 4 வருடங்களுக்கு சிகிச்சை பெறலாம்.
திட்டத்தில் சேர்த்து கொள்ளப்படும் பயனாளிகளுக்கு மருத்துவக் காப்பீடு அட்டை வழங்கப்படும். இந்த அட்டை வைத்திருப்பவர், அவரது மனைவி, குழந்தைகளுக்கு வேலை கிடைக்கும் வரை அல்லது திருமணம், அல்லது 25 வயதை அடையும் வரை திட்டத்தின் மூலம் பயன்பெறலாம். அனுமதிக்கப்பட்ட தொகைக்கு உள்பட்டு எத்தனை முறை வேண்டுமானாலும், எந்த நிபந்தனையும் இன்றி சிகிச்சை பெறலாம்.
திட்டத்திற்கான அடையாள அட்டை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு எதிரே உள்ள அலுவலகத்தில் புகைப்படம் எடுத்து வழங்கப்படுகிறது.
இருதயம், நெஞ்சக அறுவை சிகிச்சை, புற்றுநோய், சிறுநீரக நோய்கள், மூளை மற்றும் நரம்பு மண்டலம், கண் நோய், இரைப்பை மற்றும் குடல் நோய்கள், ஒட்டுறுப்பு (பிளாஸ்டிக்) அறுவை சிகிச்சைகள், காது, மூக்கு, தொண்டை நோய்கள், கர்ப்பப்பை நோய்கள், ரத்த நோய்கள், குழந்தைகளுக்கான தீவிர மற்றும் அறுவை சிகிச்சை மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை போன்ற நோய்களுக்கு முற்றிலும் இலவசமாக நோயாளிகளுக்கு சிகிச்சை, தொடர் சிகிச்சை அளிக்கப்படும்.
திருநெல்வேலி மாவட்டத்தில் தென்காசி, அம்பாசமுத்திரம், சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைகள், திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகிய அரசு மருத்துவமனைகள் மற்றும் பாளையங்கோட்டை முருகன்குறிச்சி அன்னை வேளாங்கண்ணி மருத்துவமனை, அரவிந்த் கண் மருத்துவமனை, வள்ளியூர் அருள்மிஷன் மருத்துவமனை, டாக்டர் அகர்வால் கண் மருத்துமனை, கேலக்ஸி மருத்துவமனை, கிருஷ்ணா மெட்டனிட்டி ஹோம், பீஸ் ஹெல்த் சென்டர், பொன்ரா நர்சிங் ஹோம், ஆர்.எஸ்.பி. நர்சிங் ஹோம், திருநெல்வேலி ஷீபா மருத்துவமனை, சக்தி மருத்துவமனை, சுப்பிரமணியன் நர்சிங் ஹோம், வீ கேர் மெட்பாலா மருத்துவமனை ஆகிய 17 மருத்துவமனைகளில் பயனாளிகள் சிகிச்சை பெறலாம்.
திருநெல்வேலி மாவட்டத்தில் இதுவரை 28,248 பயனாளிகளுக்கு ரூ. 56.46 கோடி மதிப்பில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் தொடர்பாக பொதுமக்கள் விவரம் அறிய விரும்பினால் மாவட்ட திட்ட அலுவலர் க.முத்துக்குமார் கைபேசி எண்: 73730 04967, திட்ட ஒருங்கிணைப்பாளர் என்.ஹெச். சின்னத்துரை கைபேசி எண்: 73730 04966 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.