திருநெல்வேலி

தமிழகத்தில் 21 இடங்களில் மூலிகைப் பண்ணை அமைக்க நடவடிக்கை: இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை ஆணையர்

தமிழகத்தில் 21 இடங்களில் மூலிகைப் பண்ணை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை ஆணையர் மோகன் பியாரி.

DIN

தமிழகத்தில் 21 இடங்களில் மூலிகைப் பண்ணை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை ஆணையர் மோகன் பியாரி.
தமிழ்நாடு மாநில மூலிகை தாவர வாரியத்தின் சார்பில், பாளையங்கோட்டையில் உள்ள அரசு சித்த மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான மூலிகை தொழில் பங்குதாரர்கள் பயிற்சிக் கூட்டத்தில் அவர் பேசியது:
தமிழ்நாடு மாநில மூலிகை தாவர வாரியம், தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச்சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு செயல்பட்டு வருகிறது. விவசாயிகள், மூலிகை சேகரிப்பாளர்கள், வர்த்தகர்கள், ஏற்றுமதியாளர்கள் ஆகியோருக்கு மூலிகை சார்ந்த திட்டங்களைச் செயல்படுத்த தேவையான நிதியுதவி மற்றும் தகுதியான மானியத்தை தேசிய மூலிகை தாவர வாரியத்திடம் இருந்து பெற ஆவண செய்துவருகிறது.
வாரியத்தில் உறுப்பினர்களாகப் பதிவு செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஏற்கெனவே தோட்டக்கலைத் துறை, வேளாண்துறை, வனத் துறைகளின் ஆலோசனையின் பேரில், மூலிகை தொழிலில் ஈடுபட்டுள்ள மற்றும் விருப்பமுள்ளவர்கள் வாரியத்தில் சேரலாம். உறுப்பினர் பதிவை மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பித்துக் கொள்ள வேண்டும். உறுப்பினர்களாக பதிவுசெய்ய 31-8-2018 ஆம் தேதி கடைசி நாளாகும்.
மூலிகை பயிர்களின் உற்பத்தியை அதிகரிக்கும் வகையிலும், விவசாயிகளுக்கு ஏற்றுமதி மற்றும் விற்பனை சந்தைகளை தெரிந்துகொள்ளும் வகையிலும், மாவட்ட அளவில் மூலிகை தொழில் பங்குதாரர்களின் ஒருநாள் பயிற்சிக் கூட்டம் பல்வேறு மாவட்டங்களிலும் நடத்தப்பட்டு வருகிறது. வனஅலுவலர்கள், வேளாண்மைத் துறை அலுவலர்கள் மூலம் ஆலோசனை வழங்கப்படுவதால், விவசாயிகள் தங்கள் பகுதிக்கு ஏற்ற மூலிகைகளைச் சாகுபடி செய்ய வாய்ப்பு ஏற்படுகிறது.
நெல், வாழை உள்ளிட்ட பயிர்களைக் காட்டிலும் மூலிகைப் பயிர்களைச் சாகுபடி செய்யும்போது, அதற்கு மானியமும், ஏற்றுமதி வாய்ப்புகளும் அதிகம் உள்ளன. கற்றாழை, வேம்பு, துளசி, கதா, கருவேலம், குன்னிமுத்து, வசம்பு, ஆடாதொடை, சிறுகற்றாழை, நிலவேம்பு உள்பட மொத்தம் 92 வகையான மூலிகை தாவரங்களுக்கு 30 முதல் 50 சதவிகிதம் வரை மானிய உதவிகள் வழங்கப்படுகிறது. அதை விவசாயிகள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
நிலவேம்பு கசாயம் 9 வகையான மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்பட்டு வருகிறது. அதில் சந்தனம் தவிர மீதமுள்ள அனைத்து மூலிகைகளும் எளிதாக போதுமான அளவில் கிடைத்து வருகின்றன. சந்தனம் மட்டும் பல்வேறு அனுமதிகளுக்கு இடையே பெற வேண்டியுள்ளது.
சித்த மருத்துவக் கல்லூரிகளில் மூலிகை பண்ணைகளை முறையாகப் பராமரிக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். இந்த வாரியத்தின் மூலம் தமிழகத்தில் 21 இடங்களில் மூலிகை பண்ணை அமைக்கவும், மூலிகை சந்தைகளை ஏற்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றார் அவர்.
மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் தமிழ்நாடு மாநில மருத்துவ மூலிகை வாரிய ஒருங்கிணைப்பாளர் எம். இந்துமதி, தூத்துக்குடி துறைமுக போக்குவரத்து மேலாளர் ராஜேந்திரன், தூத்துக்குடி துறைமுக சுங்க தரகர் சங்கத் தலைவர் ஜெயந்த் தாமஸ், வேளாண் வணிகம் இணை இயக்குநர் பி. மேரி அமிர்தா பாய், அரசு சித்த மருத்துவ கல்லூரி முதல்வர் ஆர். நீலாவதி, திருநெல்வேலி, மதுரை, விருதுநகர், கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்ட வன அலுவலர்கள், விவசாயிகள் மற்றும் அலுவலர்கள், சித்த மருத்துவக் கல்லூரி மாணவர், மாணவிகள் பங்கேற்றனர்.
அதிக வருவாய்க்கு வாய்ப்பு
திருநெல்வேலி ஆட்சியர் சந்தீப் நந்தூரி பேசுகையில், இந்திய சித்த மருத்துவம் குறித்த சிறப்புகள் அதிக மக்களுக்கு இன்னும் தெரியாமல் உள்ளன. இம்மாவட்டத்தில் விவசாயிகள் அதிகளவில் நெல் சாகுபடி செய்கின்றனர். மருத்துவப் பயிர்கள் சாகுபடியில் நல்ல வருமானம் உள்ளதால், இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அவசியமாகும். மூலிகை பயிர் உற்பத்தியை சந்தைப்படுத்தும் வழிகளும், ஏற்றுமதி குறித்த விவரங்களையும் தமிழ்நாடு மாநில மூலிகை தாவர வாரியத்தின் மூலம் அறிந்து செயல்பட வேண்டும். உலகளவில் இந்திய சித்த மருத்துவத்திற்கு சிறப்பான இடம் உள்ளது. அதனால், மூலிகைகளின் தேவை அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மனைவி சொன்னால், கேட்டுக் கொள்ள வேண்டும்: முதல்வர் அறிவுரை!

சிபில் ஸ்கோர்! உலா வரும் கட்டுக்கதைகளும் உண்மைகளும்!

ஸ்னிகோ தொழில்நுட்பத்தில் பிழைகள்..! ஆஷஸ் போட்டியில் தொடரும் சர்சை!

இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இருதரப்பு உறவுகளுக்கு புதிய உத்வேகம்: பிரதமர் மோடி

மக்களவையில் விபி - ஜி ராம் ஜி மசோதா நிறைவேற்றம்! நகலைக் கிழித்தெறிந்த எதிர்க்கட்சிகள்!

SCROLL FOR NEXT