எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா ஆலோசனைக் கூட்டம்
திருநெல்வேலியில் நடைபெற உள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்கான முன்னேற்பாடு ஆலோசனைக் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
திருநெல்வேலியில் நடைபெற உள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்கான முன்னேற்பாடு ஆலோசனைக் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு ஆட்சியர் சந்தீப் நந்தூரி முன்னிலை வகித்தார். தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி தலைமை வகித்து பேசியது:
டாக்டர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா திருநெல்வேலியில் இம் மாதம் 12 ஆம் தேதி நடைபெற உள்ளது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி, பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைக்க உள்ளார். இம் மாவட்டத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு புதிய திட்டங்களையும் அறிவிக்க உள்ளார்.
இவ்விழாவில், பல்வேறு அரசுத் துறைகளின் மூலம் அதிகளவிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும். துறை அலுவலர்கள் பயனாளிகளைப் பாதுகாப்பாக அழைத்து வர முன்னேற்பாடுகளை செய்திட வேண்டும். காவல் துறையினர் தேவையான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்திட வேண்டும். பல்வேறு துறைகளின் மூலம் புதிதாக கட்டப்பட்டு, திறக்கப்பட தயார் நிலையில் உள்ள கட்டடங்கள் மற்றும் பணிகள் முடிக்கப்பட்டுள்ள திட்டப் பணிகள் விவரங்களையும், புதிதாக அடிக்கல் நடப்பட வேண்டிய திட்டப் பணிகள் குறித்த விவரங்களை விடுபடாமல் முழுமையாக தயார் செய்திட வேண்டும் என்றார் அவர்.
கூட்டத்தில், தென்காசி மக்களவைத் தொகுதி உறுப்பினர் வசந்தி முருகேசன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆர்.முருகையாபாண்டியன் (அம்பாசமுத்திரம்), செல்வமோகன்தாஸ்பாண்டியன் (தென்காசி), அ.மனோகரன் (வாசுதேவநல்லூர்), மாவட்ட வருவாய் அலுவலர் பூ.முத்துராமலிங்கம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் சக்தி குமார், மாநகர காவல் துணை ஆணையர் சுகுண சிங், உதவி ஆட்சியர் (பயிற்சி) க.இளம்பகவத், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆ.பழனி, மாநில கூட்டுறவு விற்பனை இணைய துணைத் தலைவர் கண்ணன் (எ) ராஜூ, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் சுப்பையாபாண்டியன், திருநெல்வேலி-தூத்துக்குடி மாவட்ட நெசவாளர் சங்கத் தலைவர் ஆறுமுகம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.