திருநெல்வேலி

சுற்றுலா பேருந்து - லாரி மோதல்: ஆந்திரத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

DIN

திருநெல்வேலி-கன்னியாகுமரி புறவழிச் சாலையில் டக்கரம்மாள்புரம் அருகே நின்று கொண்டிருந்த சுற்றுலா பேருந்து மீது சிமென்ட் பாரம் ஏற்றி வந்த லாரி மோதியதில் ஆந்திரத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர்.
ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டம், தெனாலி மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளைச் சேர்ந்த 45 பேர் தமிழகத்துக்கு சுற்றுலா வந்தனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளையும் பார்வையிட்ட பிறகு கன்னியாகுமரிக்கு வந்து கொண்டிருந்தனர். சனிக்கிழமை அதிகாலை திருநெல்வேலியை கடந்து கன்னியாகுமரி புறவழிச் சாலையில் கௌசானல்புரம் அருகேயுள்ள தனியார் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி பகுதியில் சாலை ஓரம் பேருந்தை நிறுத்தினார் ஓட்டுநர். பேருந்தில் இருந்த சிலர் கீழே இறங்கி இயற்கை உபாதைக்காக ஒதுங்கினர். சிலர் பேருந்திலேயே தூங்கிக் கொண்டிருந்தனர்.
அப்போது, திண்டுக்கல்லில் இருந்து சிமென்ட் பாரம் ஏற்றிக் கொண்டு மார்த்தாண்டம் நோக்கி வந்த லாரி, சுற்றுலா பேருந்து மீது பயங்கரமாக மோதியது. இதில், பேருந்தில் இருந்தவர்களும், வெளியே நின்றவர்களும் படுகாயமடைந்தனர். நாகவர்த்தினி (43), ரத்தினமாணிக்கம் (55), தேசு வெங்கட்ராமராவ் (63), களிகண்டி ராமையா (66) ஆகிய 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் சத்யம் (50) என்பவர் உயிரிழந்தார்.
இவர்களைத் தவிர, குமார் (50), சீதம்மாள் (64), பிரசன்னா (23), அனுஷா (22), சூரிய நாராயணன் (62), சாவித்திரி (50) ஆகியோர் காயமடைந்து திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
விபத்தில் உயிரிழந்த அனைவரும் பேருந்தின் பின்புறம் நின்று கொண்டிருந்தவர்கள். காயமடைந்தவர்கள் பேருந்துக்குள் தூங்கிக் கொண்டிருந்தவர்கள். விபத்து நடந்தவுடன் லாரி ஓட்டுநர் தப்பியோடிவிட்டார்.
சம்பவ இடத்துக்கு வந்த போக்குவரத்து, சட்டம்-ஒழுங்கு துணை ஆணையர்கள் பெரோஸ்கான் அப்துல்லா, சுகுணா சிங் ஆகியோர் மீட்புப் பணிகளை துரிதப்படுத்தினர். உதவி ஆணையர் சுதந்திரராஜன் தலைமையிலான போலீஸார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருநெல்வேலி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
நெல்லை மாவட்ட நிர்வாகம் உதவி
விபத்து குறித்து தகவலறிந்த ஆந்திர மாநில அரசு, தமிழக அரசை தொடர்பு கொண்டு உதவி கோரியது. இதையடுத்து, திருநெல்வேலி மாவட்ட வருவாய் அலுவலர் பூ. முத்துராமலிங்கம், கோட்டாட்சியர் மைதிலி ஆகியோர் அரசு மருத்துமவனைக்கு சென்று காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறினர். மேலும், பேருந்தில் வந்த அனைவருக்கும் காலை, மதிய உணவு ஏற்பாடு செய்துதரப்பட்டது.
இறந்தவர்கள் 5 பேரின் உடல்களும் பிரேதப் பரிசோதனைக்கு பிறகு தனித்தனி வாகனங்களில் ஆந்திரத்துக்கு அனுப்பப்பட்டது. இதேபோல, காயமடைந்தவர்களும் சிகிச்சைக்குப் பிறகு, இதர நபர்களுடன் தனியே பேருந்தில் ஆந்திரத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிகரிக்கும் தொண்டை வலி, இருமலுடன் காய்ச்சல்: சீசன் நோயாக மாறியதா கரோனா?

பாலியல் புகாரில் சிக்கியவர்கள் மீது நடவடிக்கை: எச்டி குமாரசாமி உறுதி

அஜித் படத்தில் சிம்ரன், மீனா?

மரத்தில் கார் மோதி விபத்து: தாயுடன் மகன் பலி

கல்பனா சோரன் வேட்புமனுத் தாக்கல்!

SCROLL FOR NEXT