முகப்பு
திருநெல்வேலி

பாதுகாப்பு கருவிகளுக்காக தவிக்கும் வேட்டைத் தடுப்பு காவலர்கள்!

வேட்டைத் தடுப்பு பணியில் ஈடுபடுபவர்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதால்,  பாதுகாப்பு கருவி மற்றும் தகவல் தொடர்பு

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:51 PM
பகிர்:

வேட்டைத் தடுப்பு பணியில் ஈடுபடுபவர்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதால்,  பாதுகாப்பு கருவி மற்றும் தகவல் தொடர்பு கருவிகளை வனத்துறை வழங்க வேண்டும் என வனக் காப்பாளர்கள் மற்றும் வேட்டைத் தடுப்பு காவலர்கள் எதிர்பார்க்கின்றனர். 
திருநெல்வேலி வனச்சரகத்தின் கீழ்  தாழையூத்து, மேலப்பாட்டம், கூந்தன்குளம்,  மாயமான்குறிச்சி,  ஊத்துமலை உள்ளிட்ட 9 பீட்டுகள் உள்ளன. குறிப்பாக தாழையூத்து பீட்டிற்கு உள்பட்ட கங்கைகொண்டான் மான்கள் சரணாலயத்தின் வேலி முற்றிலும் சிதிலமடைந்துவிட்டதால், அங்கிருந்து வெளியேறும் மான்கள் சுமார் 40 கி.மீ. சுற்றளவில் மலைகள் மற்றும் குன்றுகளில் சுற்றித் திரிகின்றன. இதேபோல் மாவட்டம் முழுவதும் மயில்கள் மற்றும் முயல்கள் ஏராளமாகக் காணப்படுகின்றன. ஆங்காங்கே மிளாக்களும் காணப்படுகின்றன. இவை வேட்டையாடப்படுவதைத் தடுக்கும் வகையில் வனத்துறை சார்பில் வேட்டைத் தடுப்பு காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இரவு நேரங்களில் வனக்காப்பாளர் தலைமையில் வேட்டைத் தடுப்பு காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர்.
வேட்டைத் தடுப்பு ரோந்து:  விழாக்காலங்களில் மான்,  முயல் உள்ளிட்ட வனவிலங்குகள் வேட்டையாடப்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. அதனால் விழாக் காலங்களில் வனத்துறை வாகனத்தில் சுமார் 70 கி.மீ. சுற்றளவிலும், மற்ற நாள்களில் இரு சக்கர வாகனங்களில் 25 கி.மீ. சுற்றளவிலும் வேட்டைத் தடுப்பு காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். குறிப்பாக செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இரவு நேரங்களிலும், ஞாயிற்றுக்கிழமைகளில் பகல்,  இரவு என இரு வேளைகளிலும் வேட்டைத் தடுப்பு ரோந்து பணி நடைபெறுகிறது.  
இந்த வேட்டைத் தடுப்புப் பணியின் காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தில் மான், முயல், மயில், மிளா போன்ற வன விலங்குகள் மனிதர்களால் வேட்டையாடப்படுவது கணிசமாகக் குறைந்துள்ளது. இதனால் மான், முயல், மயில் ஆகியவை வெகுவாகப் பெருகியுள்ளன. ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே இருந்த மான்கள் மற்றும் மயில்கள் இப்போது எல்லா இடங்களுக்கும் பரவியுள்ளன. 
பாதுகாப்பு இல்லை: ஆனால் வேட்டைத் தடுப்பு பணியில் ஈடுபடுபவர்களுக்கு வனத்துறை சார்பில் பாதுகாப்பு வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை என வனக்காப்பாளர்களும், வேட்டைத் தடுப்பு காவலர்களும் குற்றஞ்சாட்டுகின்றனர். 
இது தொடர்பாக அவர்கள் மேலும் கூறியதாவது: இரவு நேரங்களில் காட்டுப் பகுதியில் வேட்டைத் தடுப்பு ரோந்து பணியில் ஈடுபடும் எங்களுக்கு வேட்டையாட வரும் சமூக விரோதிகளால் ஏதாவது பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டால்,  அதிலிருந்து தப்பிக்கவோ அல்லது உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கவோ எந்த வசதியும் செய்து தரப்படவில்லை. 
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு முன்னீர்பள்ளம் காட்டுப் பகுதியில் முயல்கள் வேட்டையாடப்படுவதாக  தாழையூத்து பீட்டைச் சேர்ந்த வேட்டைத் தடுப்புக் குழுவினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற குழுவினர், வேட்டையாடியவர்களை பிடிக்க முற்பட்டபோது, இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது வேட்டைத் தடுப்புக் குழுவிடம் பாதுகாப்பு கருவிகள் எதுவும் இல்லை. அதனால் வேட்டைத் தடுப்புக் குழுவினர்,  வேட்டையாட வந்த கும்பலால் தாக்கப்பட்டனர். வேட்டைத் தடுப்பு காவலர்களுக்கு காயம் ஏற்பட்டது.  
மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள வனக்காப்பாளர்களுக்கு தற்காப்புக்காக துப்பாக்கி வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று வேட்டைத் தடுப்புக் குழுவில் உள்ள வனக்காப்பாளர்களுக்கும் துப்பாக்கி வழங்க வேண்டும். வேட்டைத் தடுப்பு பணியின்போது ஏதாவது பிரச்னை ஏற்பட்டால், அது தொடர்பாக உயரதிகாரிகளுக்கு தகவல் கொடுக்க வாக்கி-டாக்கி வழங்க வேண்டும். 
பயிற்சி தேவை: மான், மிளா, மயில் ஆகியவை நாய் துரத்துவதால் கிணற்றில் விழுகின்றன. இதேபோல் தண்ணீர் மற்றும் உணவை தேடி அலையும் மான், மிளா ஆகியவை அவ்வப்போது கிணற்றில் விழுந்துவிடுகின்றன. அதையும் வனக்காப்பாளர் தலைமையிலான வேட்டைத் தடுப்பு காவலர்களே மீட்கின்றனர். விலங்குகளை மீட்க கயிறு மற்றும் வலை இருக்கிறது. 
எனினும் மீட்புப் பணியின்போது கிணற்றில் எவ்வாறு இறங்குவது, எந்தெந்த மாதிரியான இடங்களில் எப்படி மீட்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து வேட்டைத் தடுப்பு காவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்படவில்லை. ஆண்டுதோறும் குறைந்தபட்சம் 50 மான்கள், 20 மயில்கள், 5 மிளாக்கள் கிணற்றில் விழுகின்றன. இவையனைத்தையும் எவ்வித பயிற்சியும் இல்லாமல்தான் வேட்டைத் தடுப்பு காவலர்கள் மீட்கின்றனர். 
எனவே,  தீயணைப்புத் துறையினருக்கு வழங்கப்படுவது போன்று வேட்டைத் தடுப்பு காவலர்களுக்கும் பயிற்சியளிக்க வனத்துறை ஏற்பாடு செய்ய வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர்.
பாதுகாப்பை பலப்படுத்த பரிந்துரை: இதுதொடர்பாக வனத்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது,  "வேட்டைத் தடுப்பு குழுவினரின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். அவர்களுக்கு பாதுகாப்பு கருவிகள், தகவல் தொடர்பு கருவிகள் வழங்குவதற்காக அரசுக்கும் பரிந்துரை அனுப்பியிருக்கிறோம். அவ்வப்போது வனத்துறைக்கு கிடைக்கும் நிதியின் மூலம் மீட்புப் பணிகளில் ஈடுபடும் வேட்டைத் தடுப்பு குழுவினருக்கு பயிற்சி அளிக்கிறோம்' என்றார் அவர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.