திருநெல்வேலி

84 அடி ராமநதி அணை நிரம்பியது: உபரிநீர் திறப்பு

DIN

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக 84 அடி உயரம் கொண்ட ராமநதி அணை நிரம்பியது. இதைத்தொடர்ந்து, அணையிலிருந்து உபரிநீர் வெளியேற்றப்படுகிறது.
முன்னதாக, ராமநதி அணையின் நீர்மட்டம் வியாழக்கிழமை காலை 79 அடியாக இருந்தது. அன்று நீர்ப்பிடிப்புப் பகுதியில் பலத்த மழை பெய்ததையடுத்து அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால், அணையின் நீர்மட்டம் வெள்ளிக்கிழமை காலை 82 அடியானது.
அணை நிரம்பும் நிலையில் இருந்ததால், அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் வெங்கடேஷ், வியாழக்கிழமை இரவு ரவணசமுத்திரம், கடையம் பகுதியில் ராமநதி கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தினார். இந்நிலையில், மாவட்ட துணை ஆட்சியர் (வழங்கல்) நடேசன் வெள்ளிக்கிழமை காலை அணையைப் பார்வையிட்டு அணையின் நீர்மட்டம், அணைக்கு வரும் நீரின் அளவு மற்றும் அவசரகாலத்தில் தண்ணீர் திறந்துவிடப்படும் வழிகள் குறித்து ஆய்வு செய்தார்.
அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் வெங்கடேஷ், ராமநதி அணை உதவிப் பொறியாளர் முருகேசன், பொதுப்பணித் துறை இளநிலைப் பொறியாளர் சரவணக்குமார், அணை உதவியாளர் ஜோசப் ஆகியோர் உடனிருந்தனர். 
இதற்கிடையே, வெள்ளிக்கிழமை பகல் ஒரு மணியளவில் அணையின் நீர்மட்டம் 83.50 அடியை தாண்டியதையடுத்து, அணைக்கு வரும் 30 கனஅடி நீர் அணை பாதுகாப்பிற்காக, வடகால், தென்கால் மதகு மற்றும் பிரதான மதகு வழியாக தலா 10 கனஅடி திறந்துவிடப்பட்டது. இந்தத் தண்ணீரை விவசாயிகள் முறையாகப் பயன்படுத்தவும், குளங்களில் சேமித்து வைக்கவும் வலியுறுத்தப்பட்டது.
அணைகளின் நீர்மட்டம் (வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி): பாபநாசம் அணை- 109.70 அடி. அணைக்கு வரும் நீரின் அளவு 674.77 கன அடி, வெளியேற்றப்படும் நீரின் அளவு 604.75 கன அடி. சேர்வலாறு அணை- 122.37 அடி. மணிமுத்தாறு அணை- 58.50 அடி. அணைக்கு வரும் நீரின்அளவு 287 கன அடி, வெளியேற்றப்படும் நீரின் அளவு 350 கனஅடி. கடனாநதி அணை -67.80 அடி. அணைக்கு நீர்வரத்து 47 கனஅடி, வெளியேற்றப்படும் நீரின் அளவு 10 கனஅடி.
கருப்பாநதி அணை- 71.36 அடி. அணைக்கு வரும் 15 கனஅடி நீர் உபரிநீராக வெளியேற்றப்படுகிறது. குண்டாறு அணை முழுக்கொள்ளளவான 36.10 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 47 கனஅடி நீர் உபரிநீராக வெளியேற்றப்படுகிறது. கொடுமுடியாறு அணை முழுக்கொள்ளளவான 52.50 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 15 கனஅடி நீர் உபரிநீராக வெளியேற்றப்படுகிறது. அடவிநயினார் கோவில் அணை- 125.50 அடி. நீர்வரத்து 22 கன அடி.
வெள்ளிக்கிழமை காலை 7 மணி வரை கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையளவு (மி.மீட்டரில்): பாபநாசம்- 4, சேர்வலாறு- 2, மணிமுத்தாறு 10.6, கடனாநதி- 2, ராமநதி-15, கருப்பாநதி- 2.5, குண்டாறு அணை- 31, அடவிநயினார் கோவில் அணை- 19, அம்பாசமுத்திரம்- 13.60, ஆய்குடி- 7.20, சேரன்மகாதேவி- 6.40, செங்கோட்டை- 19, சிவகிரி- 1, தென்காசி- 27, திருநெல்வேலி- 2.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப நோய்களுக்கு சிகிச்சையளிக்க அரசு மருத்துவமனையில் சிறப்பு வாா்டு

கோட் நாயகி மீனாட்சி செளத்ரி - புகைப்படங்கள்

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

SCROLL FOR NEXT