முகப்பு
திருநெல்வேலி

ஆட்சியரகத்தில் குவியும் மக்கள் திணறும் மாவட்ட நிர்வாகம்: தீர்வு  என்ன?

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு பொதுப் பிரச்னைக்காக ஏராளமானோர் வருகிறபோது

Updated On : 31 ஜனவரி, 2024 at 8:04 AM
பகிர்:

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு பொதுப் பிரச்னைக்காக ஏராளமானோர் வருகிறபோது, அவர்களை வளாகத்துக்குள் அனுமதிக்க மாவட்ட நிர்வாகம் மறுப்பதால், கொக்கிரகுளம்-மேலப்பாளையம் சாலை போக்குவரத்து நெரிசலால் தொடர்ந்து ஸ்தம்பித்து வருகிறது.
குறைகளுக்குத் தீர்வு கேட்டு வரும் மக்கள் அனைவரையும் ஆட்சியர் அலுவலக வளாகத்துக்குள் அனுமதிக்க வேண்டும்; அவர்களுடைய உரிமை மறுக்கப்படக் கூடாது என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு அக்டோபரில், கந்துவட்டி கொடுமை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீக்குளித்ததைத் தொடர்ந்து, இரு வாயில்களைத் தவிர எஞ்சிய அனைத்து வாயில்களும் மூடப்பட்டன. இதனால் பிரதான வாயில் மற்றும் மற்றொரு வாயில் வழியாக கடும் சோதனைக்குப் பின்னரே மக்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். 
அதேநேரத்தில் ஒரே பிரச்னைக்காக ஏராளமானோர் திரண்டு வரும்போது, அவர்களில் 5 பேர் மட்டுமே ஆட்சியர் அலுவலக வளாகத்துக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள். எஞ்சிய அனைவரையும் வாயிலுக்கு வெளியில் நிறுத்திவிடுகிறார்கள். இதனால் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறபோது கொக்கிரகுளம்-மேலப்பாளையம் சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில், திங்கள்கிழமை குடிநீர் கேட்டு காலிக் குடங்களுடன் குன்னத்தூர் மக்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர்களை ஆட்சியர் அலுவலக வாயிலிலேயே போலீஸார் தடுத்து நிறுத்தியதால், கொக்கிரகுளம்-மேலப்பாளையம் சாலை ஸ்தம்பித்தது. இதனால் சாலையில் இருபுறமும் பேருந்துகள், கார்கள் என அனைத்து வாகனங்களும் செல்ல முடியாமல் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பாதுகாப்புப் பணியில் நின்ற போலீஸாரால், போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை கட்டுப்படுத்தி ஓரமாக அமர வைக்கவோ, போக்குவரத்தை சரிசெய்யவோ முடியவில்லை. இதனால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அதிகார துஷ்பிரயோகம்: இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் கே.ஜி.பாஸ்கரன் கூறியதாவது: பொதுமக்களை ஆட்சியர் அலுவலகத்துக்குள் அனுமதிக்காமல், சாலையிலேயே நிறுத்துவது தவறான நடவடிக்கையாகும். கந்து வட்டியால் 4 பேர் தற்கொலை செய்து கொண்டதைக் காரணம்காட்டி மக்களை அனுமதிக்க மறுக்கிறார்கள். தற்கொலையை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, பொதுமக்களை அனுமதிக்கமாட்டோம் என முடிவெடுத்து, வாயிலை மூடுவது அதிகார துஷ்பிரயோகம் ஆகும்.
எல்லா மாவட்டங்களிலும் ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டங்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. ஆனால், திருநெல்வேலியில் மட்டும் 1999இல் நடைபெற்ற சம்பவத்தை காரணமாகக் கூறி ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதிப்பதில்லை. இப்போது தற்கொலை சம்பவத்தை காரணம்காட்டி வாயிலை அடைத்து, மக்களை சாலையில் நிறுத்தி வைக்கிறார்கள்.
ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் அமர போதிய இருக்கை வசதியில்லை. மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு வரும் அனைவருமே நீண்ட வரிசையில் நின்றுதான் மனு அளிக்க வேண்டியுள்ளது. எனவே, ஆட்சியர் அலுவலகத்துக்குள் அனைவரையும் அனுமதிப்பதோடு, அனைத்து வாயில்களையும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
உரிமை மறுப்பு: சமூக ஆர்வலர் உஸ்மான் கான் கூறுகையில், "வட்ட அளவில் சிறப்பான முறையில் குறைதீர் கூட்டம் நடைபெறுமானால், ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குவியமாட்டார்கள். 
ஆனால், மற்ற இடங்களில் மக்களின் குறைவுகளுக்கு தீர்வு கிடைக்காததால், ஆட்சியரை சந்தித்தாலாவது நம்முடைய குறைதீருமா என்ற எண்ணத்தில் ஆட்சியர் அலுவலகம் வருகிறார்கள்.
ஆனால், ஆட்சியர் அலுவலகத்தில் அவர்களை அனுமதிக்க மறுக்கும்போது, அவர்களுடைய உரிமைகளே மறுக்கப்படுகிறது. ஆட்சியரை பார்த்தால் நம் பிரச்னைக்கு தீர்வு கிடைத்துவிடும் என்று வருகிற மக்களை வாயிலிலேயே தடுக்கிறபோது, அவர்களின் நம்பிக்கை சிதைந்துவிடுகிறது. 
எனவே, அனைத்து வாயில்களையும் திறக்க வேண்டும். ஒரு பிரச்னைக்காக எத்தனைபேர் வந்தாலும், அவர்கள் அனைவரையும் அனுமதிக்க வேண்டும் என்றார்.
ஏற்க முடியாது: பாஜக வழக்குரைஞர் பிரிவு மாநிலச் செயலர் பாலாஜி கிருஷ்ணசுவாமி கூறுகையில், "ஏதோ ஒரு சம்பவத்துக்காக பெரும்பாலான வாயில்களை அடைத்ததை ஏற்க முடியாது. ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆட்சியர் அலுவலகம் மட்டுமன்றி, பத்திரப் பதிவு அலுவலகம், வேலைவாய்ப்பு அலுவலகம், பாளையங்கோட்டை வட்டாட்சியர் அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் என ஏராளமான அலுவலகங்கள் உள்ளன. 
எனவே, மக்கள் ஆட்சியாளரை மட்டும் பார்க்க வரவில்லை. பல்வேறு பணிகளுக்காக அங்கு வருகிறார்கள். அப்படியிருக்கையில், வாயில்களை அடைத்து வைப்பதையும், காவல் துறை மூலம் மக்களுக்கு கெடுபிடி ஏற்படுத்துவதையும் ஏற்க முடியாது. 
அனைத்து வாயில்களையும் திறக்க வேண்டும். ஒரு பிரச்னைக்காக எத்தனை பேர் வந்தாலும், அவர்கள் அனைவரையும் ஆட்சியர் அலுவலக வளாகத்துக்குள் அனுமதிக்க வேண்டும். அதேநேரத்தில் அவர்களில் சிலரை மட்டுமே ஆட்சியரை சந்திக்க அனுமதித்தால் போதும் என்றார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் போதுமான இடவசதி உள்ளது. அப்படியிருந்தும் மக்களை உள்ளே அனுமதிக்காமல், சாலையில் நிற்கவைப்பதால் விபத்து ஏற்படுவதற்கோ, தேவையில்லாத பிரச்னைகள் ஏற்படுவதற்கோ வாய்ப்புள்ளது. எனவே, மனு அளிக்க வரும் அனைவரையும் உள்ளே அனுமதித்து போதிய பாதுகாப்பை ஏற்படுத்த வேண்டியது மாவட்ட நிர்வாகத்தின் கடமையாகும் என்பதே பொதுமக்களின் கருத்து.


ஆட்சியரின் யோசனை
இது தொடர்பாக ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷிடம் கேட்டபோது அவர் கூறியது: பொதுப் பிரச்னைக்கு மனு கொடுக்க நான்கு பேர் வந்தால் போதும். நிறைய பேரை உள்ளே அனுமதித்தால் சட்டம்-ஒழுங்கை பராமரிப்பது கடினமாகிவிடும். அவர்கள் எல்லோரும் உள்ளே வந்தாலும், குறைதீர் கூட்ட அறைக்குள் வர முடியாது. 
ஒரு பிரச்னைக்கு 300 பேர் வந்து மனு கொடுத்தாலும், ஒருவர் வந்து மனு கொடுத்தாலும் அதன் மதிப்பு ஒரே மாதிரியானதுதான்.
என்னைப் பொருத்தவரையில் அத்தனை மனுக்களுமே முக்கியமானவைதான். எத்தனை பேர் வந்தாலும், அவர்கள் கொடுக்கும் மனு மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்கப்படும். என்ன பிரச்னையானாலும் உங்கள் பகுதியில் இருக்கும் அரசு அலுவலர்களிடம் மனு அளியுங்கள். அதன்பிறகும் நடவடிக்கை எடுக்காவிட்டால், 4 பேர் வந்து என்னிடம் மனு அளிக்கலாம். ஊரே திரண்டு வரவேண்டாம் என்பதே மக்களுக்கு நான் விடுக்கும் வேண்டுகோள் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.