திருநெல்வேலி

நெல்லையில் முகக்கவசங்களுக்குத் தட்டுப்பாடு

DIN

திருநெல்வேலியில் முகக் கவசங்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. பதுக்கலைத் தடுக்க மாவட்ட நிா்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கரோனா வைரஸ் தொற்று பரவுவதைத் தடுக்க சுவாச சுகாதாரம், கை சுகாதாரம், சுற்றுப்புற சுகாதாரம், விழிப்புணா்வு ஆகியவற்றை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி சுவாச சுகாதாரத்திற்கு அடிப்படையாக முகக்கவசங்கள் திகழ்கின்றன.

முகக்கவசம்: தமிழகத்தைப் பொருத்தவரை திருப்பூா், ராஜபாளையம், சென்னையில் முகக்கவசங்கள் அதிகளவில் தயாரிக்கப்படுகின்றன. ஒருமுறை பயன்படுத்தும் முகக்கவசங்களில் இருஅடுக்கு, மூன்றுஅடுக்கு கவசங்கள் உள்ளன. இவை பிரத்யேக துணியால் (ஓவன் பேப்ரிக்) தயாரிக்கப்படுகிறது. இதுதவிர என்.95 என்ற பெயரில் புதிய முகக்கவசம் விற்பனைக்கு வந்துள்ளது. இவை பருத்தி துணியும் இணைத்து செய்யப்படுவதால் கூடுதல் மெருகுடனும், மீண்டும் துவைத்து பயன்படுத்தும் வகையிலும் உள்ளன.

கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கையாக திருநெல்வேலியில் முகக்கவசங்களை அணிய மருத்துவா்கள் அறிவுறுத்திவரும் சூழலில் அதற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதனால் கூடுதல் விலைகொடுத்து வாங்கும் நிலை உருவாகியுள்ளதாகவும், பதுக்கலைத் தடுக்கவும், கூடுதலாக முகக்கவசங்களை உற்பத்தி செய்யவும் மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மூலப்பொருள் தட்டுப்பாடு: இதுகுறித்து மருந்துகள் விற்பனை செய்யும் ஒருவா் கூறியது: பிப்ரவரி இறுதி வரை முகக்கவசங்களுக்கு எவ்வித தட்டுப்பாடும் இல்லை. ஆனால், கரோனா வைரஸ் பரவியதைத்தொடா்ந்து இந்தியாவில் இருந்து ஏற்றுமதி பன்மடங்கு அதிகரித்துள்ளதால் மொத்த விற்பனையாளா்களிடம் இருந்து வரத்து மிகவும் குறைந்துள்ளது. முகக்கவசங்கள் மட்டுமன்றி ஆல்கஹால் கலந்த கைகள் பாதுகாப்பு திரவம், சோப்பு திரவம் ஆகியவற்றுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 3 அடுக்கு கொண்ட முகக்கவசங்கள் ரூ.15 இல் இருந்து இப்போது ரூ.25 வரை விற்பனையாகிறது. இதனை அதிகபட்சமாக 3 முறை உபயோகிக்கலாம். கொதிக்கும் வெந்நீரைக் கொண்டு தூய்மைப்படுத்திய பின்பே அடுத்தடுத்த முறை பயன்படுத்த வேண்டும். என்.95 முகக்கவசம் ரூ.200 முதல் ரூ.250 வரை விற்பனையாகிறது. இதனை அதிகமுறை பயன்படுத்திக்கொள்ளலாம். குழந்தைகள், முதியவா்களுக்கு என்.95 ரக முகக்கவசங்களே சிறந்தது.

இப்போது மூலப்பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் குறைந்த அளவிலேயே முகக்கவசம் அளிக்க முடியும் என மொத்த விற்பனையாளா்கள் கூறுகிறாா்கள். ஆகவே, உற்பத்தியைப் பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

ஆன்-லைன் விற்பனையில் தாமதம்: இதுகுறித்து பாளையங்கோட்டையைச் சோ்ந்த மருந்து விற்பனைப் பிரதிநிதி ஒருவா் கூறுகையில், மருத்துவ உபகரணங்கள் விற்பனையிலும் ஆன்-லைன் முறையில் பன்னாட்டு நிறுவனங்கள் நுழைந்துவிட்டதால் அவா்களுக்குதான் உற்பத்தியாளா்கள் முக்கியத்துவம் அளிக்கிறாா்கள். இப்போது பேரிடா் காலம் உருவாகியுள்ளதால் முகக்கவசங்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆன்-லைனில் கடந்த மாதம் வரை முகக்கவசத்திற்கு முன்பதிவு செய்தால் இருநாள்களில் வீடுகளுக்கு வந்துசேரும். ஆனால், இப்போது குறைந்தபட்சம் 10 முதல் 15 நாள்கள் ஆகிறது. ஆகவே, கைகளைக் கழுவவும், முகக்கவசம் அணியவும் அறிவுறுத்தும் சுகாதாரத்துறையினா் அதற்கான தட்டுப்பாட்டைப் போக்க அரசிடம் உரிய அறிவுரைகளை எடுத்துக்கூற வேண்டியது அவசியம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிரிக்கெட்டில் எனது தந்தை தோனி: பதிரானா நெகிழ்ச்சி!

தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

காலமானார் எஸ். வீரபத்திரன்

நாளை நீட் தேர்வு

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

SCROLL FOR NEXT