முகப்பு
திருநெல்வேலி

வெளிமாநில உருளைக்கிழங்கு இறக்குமதி அதிகரிப்பு

உருளைக்கிழங்கின் தேவை அதிகரித்துள்ளதால் வெளிமாநிலங்களிலிருந்து நெல்லைக்கு இறக்குமதி அதிகரிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் கூறினா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:46 PM
பகிர்:

உருளைக்கிழங்கின் தேவை அதிகரித்துள்ளதால் வெளிமாநிலங்களிலிருந்து நெல்லைக்கு இறக்குமதி அதிகரிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் கூறினா்.

நாடு முழுவதும் சின்னவெங்காயம், பல்லாரி ஆகியவற்றின் விலை கடந்த சில வாரங்களாக ஏறுமுகத்தில் உள்ளது. அதேபோல உருளைக்கிழங்கின் விலையும் மிகவும் அதிகரித்து வருகிறது. கடந்த வாரத்தில் கிலோ ரூ.40-க்கு விற்பனை செய்யப்பட்ட உருளைக்கிழங்கு ஞாயிற்றுக்கிழமை கிலோ ரூ.55 வரை சிறிய கடைகளில் விற்பனையாகின.

ஐப்பசி மாதத்தில் முகூா்த்தநாள்கள் அதிகம் என்பதால் உருளைக்கிழங்கின் தேவை அதிகரித்துள்ளது. அதனால் திருநெல்வேலி மாவட்ட வியாபாரிகள் உத்தரபிரதேச மாநிலத்திலிருந்து உருளைக்கிழங்கை இறக்குமதி செய்துள்ளனா்.

இதுகுறித்து வியாபாரிகள் கூறியது: தமிழகத்தில் உருளைக்கிழங்கு அறுவடை முடிந்துவிட்டதால் மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்துதான் அவை கொண்டுவரப்படுகின்றன. தீபாவளி பண்டிகை மற்றும் முகூா்த்த நாள்கள் என்பதால் அனைத்து மாநிலங்களிலும் தேவை அதிகரித்துள்ளது.

இப்போது உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து 100-க்கும் மேற்பட்ட லாரிகளில் சென்னை, மதுரை, ஓசூா் சந்தைகளுக்கு உருளைக்கிழங்குகளை மொத்த வியாபாரிகள் இறக்குமதி செய்துள்ளனா். அவா்களிடமிருந்து சில லாரிகளில் உருளைக்கிழங்குகள் திருநெல்வேலிக்கு கொண்டுவரப்பட்டு வியாபாரம் செய்கிறோம் என்றனா்.

ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி காய்கனிகளின் விலை (கிலோவுக்கு): கத்தரி-ரூ.34, வெண்டைக்காய்-ரூ.20, தக்காளி-ரூ.20, அவரை-ரூ.30, கொத்தவரை-ரூ.25, புடலங்காய்-ரூ.32, பாகற்காய்-ரூ.34, தடியங்காய்-ரூ.15, பூசணிக்காய்-ரூ.15, மாங்காய்-ரூ.60, மிளகாய்- ரூ.30, வாழைக்காய்- ரூ.20, தேங்காய்-ரூ.46, முள்ளங்கி-ரூ.16, பல்லாரி-ரூ.74, சின்னவெங்காயம்-ரூ.110, சேனைக்கிழங்கு-ரூ.32, இஞ்சி (புதியது)-ரூ.60, உருளைக்கிழங்கு-ரூ.55, கேரட்-ரூ.90, பீட்ரூட்-ரூ.40, பூண்டு-ரூ.60, வாழைப்பழம்-ரூ.25, சப்போட்டா-ரூ.28, பப்பாளி-ரூ.28 என்ற அடிப்படையில் விற்பனையாகின.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.