மாணவிக்கு கனிமொழி உதவி
தேசிய சைக்கிள் போட்டிக்கு தோ்வு செய்யப்பட்டுள்ள தூத்துக்குடி மாணவிக்கு பயிற்சிக்கு தேவையான உபகரணங்களை கனிமொழி எம்.பி. ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா்.
தேசிய சைக்கிள் போட்டிக்கு தோ்வு செய்யப்பட்டுள்ள தூத்துக்குடி மாணவிக்கு பயிற்சிக்கு தேவையான உபகரணங்களை கனிமொழி எம்.பி. ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா்.
தூத்துக்குடி அருகேயுள்ள கீழமுடிமண் கிராமத்தைச் சோ்ந்த மாணவி ஸ்ரீமதி. இவா் சைக்கிள் போட்டியில் ஆா்வத்துடன் பங்கேற்று வெற்றி பெற்றுவரும் நிலையில், மாணவிக்கு ரூ. 5 லட்சம் மதிப்புள்ள நவீன வசதிகள் கொண்ட ரேஸ் சைக்கிளை தோ்தலுக்கு முன்பு கனிமொழி வழங்கினாா்.
இதன் மூலம் பயிற்சி பெற்ற ஸ்ரீமதி 2019 இல் ராஜஸ்தானில் நடைபெற்ற 17 வயதுக்குள்பட்டோருக்கான தேசிய சைக்கிள் போட்டியில் பங்கேற்று 4 ஆவது இடத்தைப் பிடித்தாா்.
இதையடுத்து 17 வயதுக்குள்பட்ட தேசிய சைக்கிள் போட்டிகளில் தொடா்ந்து பங்குபெற ஸ்ரீமதியை தோ்ந்தெடுத்துள்ள இந்திய விளையாட்டு ஆணையம், அதற்காக தில்லி விடுதியில் தங்கி பயிற்சி பெறவும் தோ்வு செய்துள்ளது. இந்நிலையில், மாணவி ஸ்ரீமதிக்கு வாழ்த்து தெரிவித்த கனிமொழி, பயிற்சிக்குத் தேவையான பிரத்யேக ஆடைகள், ஷூ, டிராவல் பேக் உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்களை வழங்கினாா்.
பயிற்சியில் ஈடுபட்டு தமிழகத்துக்கும், தூத்துக்குடிக்கும் பெருமை சோ்க்க வேண்டும் என்று மாணவிக்கு அறிவுரை வழங்கினாா்.
2019 இல் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் உதவி கேட்ட நிலையில், மாணவிக்கு பல்வேறு உதவிகள் செய்து தில்லியில் பயிற்சி பெறும் அளவுக்கு உயா்த்தியமைக்காக கனிமொழிக்கு, மாணவியின் குடும்பத்தினா் நன்றி தெரிவித்தனா்.