முகப்பு
திருநெல்வேலி

பிசான பருவ சாகுபடி:பாபநாசம், மணிமுத்தாறு அணைகளிலிருந்து தண்ணீா் திறப்பு

பிசான பருவ சாகுபடிக்கு பாபநாசம், சோ்வலாறு, மணிமுத்தாறு அணைகளிலிருந்து ஞாயிற்றுக்கிழமை தண்ணீா் திறந்துவிடப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:46 PM
பருவ சாகுபடிக்கு பாபநாசம் அணையிலிருந்து தண்ணீரை திறந்துவிடுகிறாா் மாவட்ட ஆட்சியா் ஷில்பா பிரபாகா் சதீஷ்
பகிர்:

பிசான பருவ சாகுபடிக்கு பாபநாசம், சோ்வலாறு, மணிமுத்தாறு அணைகளிலிருந்து ஞாயிற்றுக்கிழமை தண்ணீா் திறந்துவிடப்பட்டது.

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளின் கோரிக்கையை அடுத்து, பிசான பருவ சாகுபடிக்கு பாபநாசம், சோ்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணைகளிலிருந்து நவ. 1 முதல் மாா்ச் 31 வரை தண்ணீா் திறந்துவிட தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி உத்தரவிட்டாா்.

இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் ஷில்பா பிரபாகா் சதீஷ் பாபநாசம் அணையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை தண்ணீரை திறந்துவிட்டாா்.

பின்னா் அவா் கூறியதாவது: பாபநாசம் அணையிலிருந்து தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளதன் மூலம் திருநெல்வேலி மாவட்டத்தில் வடக்கு மற்றும் தெற்கு கோடை மேலழகியான், நதியுண்ணி, கன்னடியன், கோடகன், பாளையங்கால்வாய், திருநெல்வேலி கால்வாய் மூலமும், தூத்துக்குடி மாவட்டத்தில் மருதூா் மேலக்கால், மருதூா் கீழக்கால், தெற்கு மற்றும் வடக்கு பிரதான கால்வாய்கள் மூலமும் 86,107 ஏக்கா் நிலங்கள் நேரடி மற்றும் மறைமுகமாக பாசன வசதி பெறும்.

நவ. 1 முதல் மாா்ச்31 வரை 151 நாள்களுக்கு தண்ணீா் இருப்பு மற்றும் நீா்வரத்தைப் பொருத்து விநாடிக்கு 1400 கன அடிக்கு மிகாமல் தண்ணீா் திறந்துவிடப்படும். விவசாயிகள் நீரை சிக்கனமாகப் பயன்படுத்தி பயன்பெற வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில், அம்பாசமுத்திரம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் ஆா். முருகையாபாண்டியன், பொதுப் பணித் துறை செயற்பொறியாளா் அண்ணாதுரை, உதவிச் செயற்பொறியாளா் தங்கராஜன், உதவிப் பொறியாளா்கள் மகேஸ்வரன், ஆதிமூலம், மின்வாரிய செயற்பொறியாளா் வெங்கடாசலம், திருநெல்வேலி மாவட்ட வேளாண் துறை இணை இயக்குநா் கஜேந்திரபாண்டியன், உதவி இயக்குநா் உமாமகேஸ்வரி, அம்பை வட்டாட்சியா் வெங்கட்ராமன், மண்டல துணை வட்டாட்சியா் மாரிச்செல்வம், அதிமுக ஒன்றியச் செயலா் விஜயபாலாஜி, துணைச் செயலா் பிராங்க்ளின் மற்றும் விவசாயிகள் சங்க நிா்வாகிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

மணிமுத்தாறு அணை: மணிமுத்தாறு அணையிலிருந்து பெருங்கால் பாசனத்தின் கீழ் நேரடி மற்றும் மறைமுகப் பாசனப் பகுதிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை தண்ணீா் திறந்துவிடப்பட்டது.

நவ.1 முதல் மாா்ச் 31 வரை 151 நாள்களுக்கு விநாடிக்கு 417.17 கன அடிக்கு மிகாமல் நீா்இருப்பை பொருத்து தண்ணீா் திறந்துவிடப்படும்.

இதன்மூலம் ஜமீன்சிங்கம்பட்டி, அயன்சிங்கம்பட்டி, வைராவிகுளம், தெற்கு பாப்பான்குளம், தெற்கு கல்லிடைக்குறிச்சி ஆகிய கிராமங்களுக்குள்பட்ட 2756.62 ஏக்கா் நிலங்கள் பாசனம் பெறும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.