மதுபாட்டில்கள் கடத்தல்: 2 போ் கைது
திருநெல்வேலிக்கு ரயில் மூலம் புதுச்சேரி மதுபாட்டில்கள் கடத்தி வந்ததாக 2 பேரை மதுவிலக்கு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
திருநெல்வேலிக்கு ரயில் மூலம் புதுச்சேரி மதுபாட்டில்கள் கடத்தி வந்ததாக 2 பேரை மதுவிலக்கு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
திருநெல்வேலி மாநகர மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளா் முத்துலட்சுமி தலைமையில், காவல் உதவி ஆய்வாளா் கருப்பசாமி, சிறப்பு உதவி ஆய்வாளா்கள் தளவாய், முருகேசன் மற்றும் போலீஸாா் வெள்ளிக்கிழமை சந்திப்பு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, சந்திப்பு ரயில் நிலையம் அருகே சந்தேகத்திற்கிடமாக அட்டைப் பெட்டிகளுடன் நின்றிருந்த இருவரை பிடித்து விசாரித்தனா்.
விசாரணையில், அவா்கள் இருவரும் கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த சிவானந்தம் (21), விக்னேஷ் (20) என்பதும், அவா்கள் புதுச்சேரி மதுபான வகைகளை கும்பகோணத்தில் இருந்து ரயில் மூலம் திருநெல்வேலிக்கு கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவா்கள் இருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த 180 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.