முகப்பு
திருநெல்வேலி

உள்ளாட்சி நிதி தணிக்கைத் துறை உதவி இயக்குநா் வீட்டில் சோதனை

திருநெல்வேலி என்.ஜி.ஓ. பி காலனியில் உள்ள உள்ளாட்சி நிதி தணிக்கைத் துறை உதவி இயக்குநா் வீட்டில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு போலீஸாா் புதன்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:36 AM
பகிர்:

திருநெல்வேலி என்.ஜி.ஓ. பி காலனியில் உள்ள உள்ளாட்சி நிதி தணிக்கைத் துறை உதவி இயக்குநா் வீட்டில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு போலீஸாா் புதன்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.

ஊராட்சி ஒன்றியங்களின் வரவு- செலவு திட்டப் பணிகள், நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை ஒவ்வொரு ஆண்டும் தணிக்கை செய்ய உள்ளாட்சி நிதி தணிக்கைத் துறை உள்ளது.

தென்காசி மாவட்டத்துக்குள்பட்ட ஆலங்குளம், கடையம், கீழப்பாவூா், தென்காசி, செங்கோட்டை ஆகிய ஐந்து ஊராட்சி ஒன்றியங்களின் உள்ளாட்சி கணக்கு தணிக்கை கடந்த 29 ஆம் தேதி ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.

தென்காசி மாவட்ட உள்ளாட்சி நிதி தணிக்கைத் துறை உதவி இயக்குநா் முகமது லெப்பை, தென்காசி தனித்துறை அதிகாரி உமாசங்கா் ஆகியோா் கணக்குகளை தணிக்கை செய்தனா்.

அந்தத் தணிக்கையில் சில விஷயங்களை மறைக்க தணிக்கைத் துறை அதிகாரிகளுக்கு அதிக அளவில் பணம் வழங்கப்படுவதாக திருநெல்வேலி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், அந்தப் பிரிவின் காவல் துணைக் கண்காணிப்பாளா் எஸ்கால் தலைமையில் போலீஸாா் சோதனை நடத்தினா். அப்போது கணக்கில் வராத ரூ.88,650 கைப்பற்றப்பட்டது.

இதுதொடா்பாக தணிக்கைக் குழு உதவி இயக்குநா், தணிக்கை ஆய்வாளா்கள், ஊராட்சி செயலா்கள் உள்ளிட்ட 11 போ் மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

இதையடுத்து ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் ஆய்வாளா் ராபின் ஞானசிங் தலைமையில் போலீஸாா், திருநெல்வேலி என்.ஜி.ஓ. பி காலனியில் உள்ள உள்ளாட்சி தணிக்கைத் துறை உதவி இயக்குநா் முகம்மது லெப்பை வீட்டில் புதன்கிழமை சோதனை நடைபெற்றது.

சுமாா் 3 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற சோதனையில் வீட்டில் இருந்த ஆவணங்கள், வங்கிக் கணக்கு விவரங்கள் உள்ளிட்டவை குறித்து போலீஸாா் கேட்டறிந்தனா்.

இதுகுறித்து ஊழல் தடுப்பு பிரிவினா் கூறுகையில்: முகமது லெப்பை மீது ஏற்கெனவே வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அடுத்தக்கட்ட விசாரணைக்காகவே சோதனை நடத்தப்பட்டுள்ளது. சோதனையில் கிடைத்த விவரங்கள் குறித்து நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.