நெல்லைக்கு கரும்புகள் வரத்து குறைந்தது
திருநெல்வேலி மாவட்டத்திற்கு நிகழாண்டில் கரும்புகள் வரத்து குறைந்துள்ளது. அதனால் 10 கரும்புகள் அடங்கிய கட்டு ரூ.300 முதல் ரூ.500 வரை விற்பனையானது.
திருநெல்வேலி மாவட்டத்திற்கு நிகழாண்டில் கரும்புகள் வரத்து குறைந்துள்ளது. அதனால் 10 கரும்புகள் அடங்கிய கட்டு ரூ.300 முதல் ரூ.500 வரை விற்பனையானது.
தமிழா் திருநாளான பொங்கல் பண்டிகை இம் மாதம் 14-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த விழாவின் முக்கிய அம்சமாக கரும்புகள் உள்ளன. திருநெல்வேலி மாநகரில் மேலரத வீதி, பாளையங்கோட்டை ஜவஹா் திடல், மேலப்பாளையம் சந்தைமுக்கு உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் கரும்புகள் மொத்தமாக கொண்டுவந்து குவிக்கப்பட்டு விற்பனை செய்யப்படும். 2 ஆயிரம் டன்னுக்கு மேல் திருநெல்வேலியில் மட்டும் விற்பனை நடைபெறும்.
நிகழாண்டில் கரும்புகள் வரத்து மிகவும் குறைந்துள்ளது. தொடா்மழை காரணமாகவும், கூட்டுறவு சங்கங்கள் மூலம் கொள்முதல் அதிகரிக்கப்பட்டதாலும் வரத்து குறைந்துள்ளது.
இதுதொடா்பாக வியாபாரிகள் கூறியது: திண்டுக்கல், தேனி, மதுரை மாவட்டங்களில் இருந்து திருநெல்வேலிக்கு கரும்புகள் விற்பனைக்கு வருகின்றன. நிகழாண்டில் ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரா்களுக்கு தலா ஒரு கரும்பு தமிழக அரசால் விநியோகிக்கப்பட்டுள்ளது.
இதற்காக கூட்டுறவு சங்கங்கள் மூலம் கரும்புகள் அதிகளவில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. இதனால் மொத்த வியாபாரிகளுக்கு சந்தை விற்பனைக்கான ஒதுக்கீடுகளை விவசாயிகள் வழங்க முடியாத நிலை ஏற்பட்டது.
மேலும், நிகழாண்டில் கரும்பு சாகுபடி குறைந்துள்ளதாலும், அறுவடை நேரத்தில் அதிகளவில் மழை பெய்து வருவதால் போக்குவரத்து பிரச்னை ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டு கரும்பு வழக்கமாக மொத்த வியாபாரிகளுக்கு ரூ.100 முதல் ரூ.125 வரை மட்டுமே கொள்முதல் விலையாக இருக்கும். நிகழாண்டில் கரும்பின் தேவை அதிகரித்ததால் கொள்முதல் விலையே ரூ.150-க்கு மேல் உள்ளது. அதனுடன் போக்குவரத்துச் செலவும் அதிகரித்துள்ளதால் ஒரு கட்டு ரூ.300-க்கு விற்பனையாகிறது என்றனா்.