ஒரே நாளில் 16,870 பேருக்கு கரோனா தடுப்பூசி
திருநெல்வேலி மாவட்டத்தில் வியாழக்கிழமை ஒரே நாளில் 16,870 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தில் வியாழக்கிழமை ஒரே நாளில் 16,870 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
கரோனா இரண்டாவது அலையால் தமிழகத்தில் நோய்த் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்தது. தொடா் நடவடிக்கையால் தற்போது நோயின் தாக்கம் குறைந்துள்ளது. நோய்த் தொற்றில் பாதுகாத்துக் கொள்ள தடுப்பூசி செலுத்துமாறு மத்திய-மாநில அரசுகள் அறிவுறுத்தியுள்ளன.
திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையம், தனியாா் மருத்துவமனைகள் உள்பட 86 மையங்களில் கரோனா தடுப்பூசிகளான கோவிஷீல்டு, கோவேக்ஸின் செலுத்தப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் தடுப்பூசி
தட்டுப்பாடின்றி செலுத்தப்பட்டு வருகிறது. பாளையங்கோட்டை, ராதாபுரம், நான்குனேரி, அம்பாசமுத்திரம், வள்ளியூா், சேரன்மகாதேவி உள்ளிட்ட வட்டாரங்களில் 8,120 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. அரசு மருத்துவமனைகளில் மட்டும் 1500 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
திருநெல்வேலி மாநகரில் பேட்டை, பழையபேட்டை, கொக்கிரகுளம், சமாதானபுரம், பெருமாள்புரம், திருநெல்வேலி சந்திப்பு உள்ளிட்ட இடங்களில் ஒரே நாளில் 3360 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசியும், 3360 பேருக்கு கோவேக்ஸின் தடுப்பூசியும் செலுத்தப்பட்டன.
கோவேக்ஸின் தடுப்பூசி கடந்த சில வாரங்களாக போதிய இருப்பு இல்லாமல் இருந்தது. முதல் தவணை செலுத்தியவா்கள்
இரண்டாவது தவணை கிடைக்காமல் காத்திருந்தனா். இந்நிலையில் திருநெல்வேலிக்கு கோவேக்ஸின் தடுப்பூசி வியாழக்கிழமை வந்ததை அறிந்த மக்கள் திருநெல்வேலி அரசு மருத்துவமனை உள்ளிட்ட முகாமில் நீண்ட வரிசையில் காத்திருந்து செலுத்திச் சென்றனா்.