முகப்பு
திருநெல்வேலி

மருத்துவ கழிவுகளை பொது வெளியில் கொட்டினால் கடும் நடவடிக்கை : ஆட்சியா் எச்சரிக்கை

மருத்துவ கழிவுகளை பொது வெளியில் கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் வே.விஷ்ணு எச்சரித்துள்ளாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:26 AM
பகிர்:

மருத்துவ கழிவுகளை பொது வெளியில் கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் வே.விஷ்ணு எச்சரித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சுற்றுச்சூழல், வனம் மற்றும் சூழல் மாறுபாடு அமைச்சகம், மருத்துவ கழிவுகளை முறையாக சேகரித்து, பிரித்து, சுத்திகரித்து, அகற்றுவதற்காக மருத்துவ கழிவுகள் மேலாண்மை விதிகள், 2016-ஐ அறிவிக்கை செய்துள்ளது.

இவ்விதிகளை பின்பற்றுவதன் மூலம் மருத்துவ கழிவுகளின் உற்பத்தியையும், சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் தாக்கத்தையும் குறைத்திட இயலும். இவ்விதிகளை அமல்படுத்துவதற்கான அதிகாரம் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்திடம் உள்ளது.

இவ்விதிகளின் படி, மருத்துவமனைகளிலிருந்து உருவாகும் மருத்துவ கழிவுகள் முறையாக பிரித்து, சேமித்து, பொது மருத்துவ கழிவு சுத்திகரிப்பு நிலையங்களிடம் சுத்திகரிப்பு செய்வதற்காக ஒப்படைக்க வேண்டும். மேலும், தொற்று ஏற்படுத்தக் கூடிய மருத்துவ கழிவுகளை 48 மணி நேரத்துக்கு மேல் சேமித்து வைக்கக் கூடாது.

தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம், மருத்துவ கழிவுகளை முறையாக கையாளுவதற்காக ஏற்கெனவே பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

எனினும் மருத்துவ கழிவுகள் சாலைகள், ஆற்றங்கரைகள், நீா் நிலைகள் மற்றும் ஒதுங்கிய பகுதிகளில் சட்ட விரோதமாக கொட்டப்படுவது தொடா்பாக ஊடகங்கள் வாயிலாக பல்வேறு புகாா்கள் தொடா்ந்து பெறப்படுகின்றன.

தற்போது நிலவிவரும் கரோனா தொற்று சூழலில், மருத்துவ கழிவுகளை முறையில்லாமல் திறந்த வெளியில் கொட்டுவது, பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்.

எனவே, அனைத்து மருத்துவமனைகள், கரோனா பராமரிப்பு மையங்கள், தனிமைப்படுத்தப்பட்ட முகாம்கள், மருத்துவ கழிவுகளை முறையாக பிரித்து, சேமித்து அந்தந்தப் பகுதிகளில் மாசுக் கட்டுப்பாடு வாரியத்தால் அனுமதிக்கப்பட்டுள்ள பொது மருத்துவ கழிவு சுத்திகரிப்பு நிலையங்களிடம் மட்டுமே ஒப்படைக்க வேண்டும்.

மேலும், அங்கீகரிக்கப்படாத முறையில் மருத்துவ கழிவுகளை அகற்றுவதை தவிா்ப்பதை உறுதி செய்ய வேண்டும். விதிகளை பின்பற்றாமல் மீறுபவா்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.