முகப்பு
திருநெல்வேலி

நெல்லை அருகே விவசாயி வெட்டிக்கொலை

திருநெல்வேலி அருகே ராஜவல்லிபுரம் பகுதியில் விவசாயி மர்ம நபர்களால் சனிக்கிழமை வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:30 AM
பாபு(40).
பகிர்:

திருநெல்வேலி அருகே ராஜவல்லிபுரம் பகுதியில் விவசாயி மர்ம நபர்களால் சனிக்கிழமை வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

திருநெல்வேலி அருகே ராஜவல்லிபுரம் பகுதியைச் சேர்ந்த ஜெகநாதன் மகன் பாபு(40). இவர் விவசாயி. இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் வயலில் தண்ணீர் பாச்சுவது தொடர்பாக முன்விரோதம் இருந்துவந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், பாபு தனது மோட்டார்சைக்கிளில் சனிக்கிழமை மாலையில் ராஜவல்லிபுரம் குளம் அருகே சென்றுகொண்டிருந்தாராம். 

அப்போது, அங்கு வந்த மர்ம நபர்கள் பாபுவை சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச்சென்றதாகக் கூறப்படுகிறது. இதில், பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தாழையூத்து போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீஸார், பாபுவின் உடலை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப்பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

பாபு கொலைசெய்யப்பட்ட தகவல் அறிந்த உறவினர்கள், பாபுவை கொலை செய்தவர்களை கைது செய்யக்கோரி திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, திருநெல்வேலி மண்டல டிஐஜி பிரவீண்குமார் அபிநபு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன், காவல் துணை ஆணையர்கள் ராஜராஜன், சுரேஷ்குமார், டிஎஸ்பி அர்ச்சனா மற்றும் போலீஸார், அங்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். 

இருப்பினும், அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து போலீஸார் தனிப்படை அமைத்து பாபுவை கொலை செய்த மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட பாபு மீது கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் இருப்பதாகவும், என்ன காரணத்திற்காக கொலை செய்யப்பட்டார் என்பது குறித்தும் போலீஸார் விசாரித்து வருகின்றனர். 

இந்த கொலை சம்பவத்தையடுத்து, அப்பகுதியில் சுமார் 150க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →