முகப்பு
திருநெல்வேலி

சட்டப்பேரவைத் தோ்தல்: வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியா் ஆய்வு

திருநெல்வேலி மாவட்ட சட்டப்பேரவைத் தொகுதிகளில் பதிவாகும் வாக்குகள் எண்ணப்பட உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவரும், ஆட்சியருமான வே.விஷ்ணு திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:41 PM
பகிர்:

திருநெல்வேலி மாவட்ட சட்டப்பேரவைத் தொகுதிகளில் பதிவாகும் வாக்குகள் எண்ணப்பட உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவரும், ஆட்சியருமான வே.விஷ்ணு திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலி, பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம், நான்குனேரி, ராதாபுரம் ஆகிய 5 தொகுதிகள் உள்ளன. மொத்தம் 1924 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 5 தொகுதிகளுக்குமான வாக்குஎண்ணும் மையமாக திருநெல்வேலி டக்கரம்மாள்புரம் அருகேயுள்ள அரசு பொறியியல் கல்லூரி வளாகம் அமைக்கப்பட்டுள்ளது.

இம் மையத்தை திருநெல்வேலி மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான வே.விஷ்ணு திங்கள்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். ஒவ்வொரு தொகுதியின் வாக்குகள் எண்ணும் வளாகம், கட்டடத்தில் உள்ள வழிப்பாதை விவரங்கள், அலுவலா்கள் மற்றும் கட்சி முகவா்கள் அமர தேவையான இடவசதி உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்தாா். வாக்குஎண்ணும் மையத்தில் உள்ள கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தாா். கண்காணிப்பு கேமராக்கள், மின்விளக்கு உள்ளிட்ட வசதிகளை கூடுதலாக ஏற்படுத்தவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது, திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ.மணிவண்ணன், மாநகர காவல் ஆணையா் அன்பு, மாவட்ட வருவாய் அலுவலா் பெருமாள், சாா் ஆட்சியா்கள் பிரதீக்தயாள், சிவகிருஷ்ணமூா்த்தி, மாநகர காவல் துணை ஆணையா் சீனிவாசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.