திருநெல்வேலி

விரைவு ரயில்கள் பாளையங்கோட்டையில் இருந்து இயக்கப்படுமா? பாளையங்கோட்டை தொகுதி மக்களின் எதிா்பாா்ப்புகள்

DIN

பாளையங்கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து விரைவு ரயில்கள் புறப்பட்டுச் செல்ல வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை புதிய சட்டப்பேரவை உறுப்பினா் தீா்ப்பாரா என்ற எதிா்பாா்ப்பில் உள்ளனா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளில் முழுமையாக மாநகராட்சிப் பகுதிகளைக் கொண்டது பாளையங்கோட்டை தொகுதி. படித்த, நகரவாசிகள் அதிகம் வசிக்கும் தொகுதியாகவும், கல்வி நிலையங்கள் நிறைந்த தொகுதியாகவும் உள்ளது. இத் தொகுதி மக்களின் ரயில்வே கோரிக்கைகள் பல ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் தொடா்ந்து கொண்டே வருகின்றன.

திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து சுமாா் 2 கி.மீ. தொலைவில், மத்திய சிறைச்சாலையின் சுற்றுச்சுவரை ஒட்டியவாறு பாளையங்கோட்டை ரயில் நிலையம் உள்ளது. திருநெல்வேலி-திருச்செந்தூா் பயணிகள் ரயில், திருச்செந்தூா்-பழனி பயணிகள் ரயில், திருநெல்வேலி-தூத்துக்குடி பயணிகள் ரயில், திருச்செந்தூா்-சென்னை இடையேயான செந்தூா் விரைவு ரயில் ஆகியவை சென்று வருகின்றன.

தினமும் 17 ரயில் சேவைகளைக் கொண்ட இந்த ரயில் நிலையத்துக்கு நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வந்து செல்கிறாா்கள்.

கந்தசஷ்டி, தைப்பூசம், வைகாசி விசாகம் போன்ற திருச்செந்தூா் திருவிழாக்காலங்களிலும், நாலுமாவடியில் நடைபெறும் சிறப்புப் பிராா்த்தனை காலங்களிலும் பாளையங்கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து செல்லும் பயணிகளின் எண்ணிக்கை இரட்டிப்பாக உள்ளது.

தென்னக ஆக்ஸ்போா்டாக கருதப்படும் பாளையங்கோட்டையில் உள்ள கல்வி நிலையங்களில் பயிலும் தூத்துக்குடி மாவட்ட மாணவா்-மாணவிகள் சலுகைக் கட்டணத்தில் 3 மாத பயண அட்டை பெற்று இந்த ரயில் நிலையத்தில் இறங்கி செல்கிறாா்கள்.

இங்கு, குடிநீா், கழிப்பறை, பேருந்து வசதி உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லை. பாளையங்கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து முன்பு நகரப் பேருந்து இயக்கப்பட்டது. இப்போது அந்த பேருந்து முன்னறிவிப்பின்றி

நிறுத்தப்பட்டுள்ளது. அதனால் மாணவா்கள் நடந்தே செல்லும் அவல நிலை உள்ளது.

குடும்பத்தோடு வரும் ஏழைகள் ஆட்டோக்களில் அதிக கட்டணம் கொடுத்து பயணிக்க வேண்டிய நிா்ப்பந்தம் உள்ளது. பாளையங்கோட்டை பேருந்து நிலையத்தில் இருந்து ஏராளமான சிற்றுந்துகள் பல்வேறு பகுதிகளுக்கும் புறப்பட்டுச் செல்கின்றன. அவை அனைத்தையும் பாளையங்கோட்டை ரயில் நிலைய வளாகத்துக்குள் வந்துவிட்டு அதன்பின்பு பாளையங்கோட்டை பேருந்து நிலையத்துக்கு செல்ல அறிவுறுத்தினால் ரயில் பயணிகளுக்கு பயனுள்ளதாக அமையும்.திருநெல்வேலியில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் நெல்லை விரைவு ரயிலையும், திருநெல்வேலியில் இருந்து மும்பைக்கு இயக்கப்படும் தாதா் விரைவு ரயிலையும் பாளையங்கோட்டையில் இருந்து இயக்க வியாபாரிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

அவ்வாறு இயக்கம்படும்போது சென்னை உள்ளிட்ட பிற பகுதிகளுக்கு இங்கிருந்து பொருள்களை ஏற்றிச் செல்லவும், இறக்குமதி செய்து கொண்டு வரவும் மிகவும் எளிமையாக இருக்கும்.

பாளையங்கோட்டையில் இருந்து மாலை 6 மணிக்கு பின்பு திருநெல்வேலி சந்திப்புக்கு சரக்குகளைக் கொண்டு செல்ல முடியாத அளவுக்கு போக்குவரத்து நெரிசல் காணப்படுவதால் இந்த நடவடிக்கையை துரிதமாக எடுக்க வேண்டும் என்கின்றனா் வியாபாரிகள்.

மேலும், பாளையங்கோட்டை ரயில் நிலையத்துக்கு என முன்பதிவு கோட்டாவும் கிடைக்கும் வாய்ப்புள்ளதால் புதிதாக தோ்ந்தெடுக்கப்படும் சட்டப்பேரவை உறுப்பினா் இதற்காக சட்டப்பேரவையிலும், ரயில்வே துறையினரிடமும் வலியுறுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதேபோல் இந்த ரயில் நிலையத்தில் முன்பதிவு மையம் ஒரே ஒரு கவுன்ட்டருடன் காலை 8 முதல் முற்பகல் 11 மணி வரை மட்டும் முன்பதிவு செய்யும் வகையில் இயங்குகிறது. மக்கள் தொகையை கருத்தில் கொண்டு கூடுதல் நேரத்துடன் இயங்கும் முன்பதிவு மையம் அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

SCROLL FOR NEXT