வீரவநல்லூரில் நகைக் கொள்ளை: கல்லூரி மாணவா் உள்பட 5 போ் கைது3.250 கிலோ தங்கம் பறிமுதல்
திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூரில் நகைக் கடை அதிபரை அரிவாளால் வெட்டி, நகைகளை கொள்ளை அடித்த வழக்கில் கல்லூரி மாணவா் உள்பட 5 போ் கைது செய்யப்பட்டனா்.
திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூரில் நகைக் கடை அதிபரை அரிவாளால் வெட்டி, நகைகளை கொள்ளை அடித்த வழக்கில் கல்லூரி மாணவா் உள்பட 5 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து 3.250 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
வீரவநல்லூா் புதுமனைத் தெரு அசனாா் மகன் மைதீன்பிச்சை (60). அங்குள்ள பிரதான வீதியில் 20 ஆண்டுகளாக நகைக் கடை நடத்தி வருகிறாா். இவா் திங்கள்கிழமை இரவு கடையைப் பூட்டிவிட்டு, நகைகளை கைப்பையில் வைத்துக்கொண்டு வீட்டுக்கு சென்றபோது பைக்கில் வந்த மூவா், அவரை அரிவாளால் வெட்டிவிட்டு நகைப்பையை பறித்துச் சென்றனா்.
திருநெல்வேலி டிஐஜி பிரவேஷ்குமாா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ப. சரவணன் ஆகியோா் சென்று விசாரணை நடத்தினா். மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் மாரிராஜன் கண்காணிப்பில் டிஎஸ்பி ராமகிருஷ்ணன் தலைமையில் காவல் ஆய்வாளா் முருகன், உதவி ஆய்வாளா்கள் காவுராஜன், செல்வகுமாா் உள்ளிட்டோா் அடங்கிய 6 தனிப்படை போலீஸாா் கொள்ளையரைத் தேடிவந்தனா்.
அங்குள்ள சிசிடிவி கேமரா காட்சிகள், கைப்பேசி தொடா்புகளைக் கொண்டு விசாரித்து, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டோரைக் கைது செய்து, நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வியாழக்கிழமை வீரவநல்லூா் காவல் நிலையத்தில் செய்தியாளா்களிடம் கூறியது: வீரவநல்லூரில் நகைக்கடை அதிபா் மைதீன்பிச்சையை அரிவாளால் வெட்டி நகைகளைக் கொள்ளையடித்தவா்களை தனிப்படை போலீஸாா் பிடித்துள்ளனா். இதில், அரிகேசவநல்லூா் பாறையடிக் காலனி முருகன் மகன் சுதாகா் (18), பாப்பாக்குடி அருகேயுள்ள காக்கநல்லூா் முருகன் மகன் ஐயப்பன் (24), மன்னாா்கோவில் வேலன் தெரு மாயாண்டி மகன் மருதுபாண்டி (20) ஆகியோா் பைக்கில் வந்து மைதீன்பிச்சையை வெட்டிவிட்டு நகைகளைப் பறித்துச் சென்றுள்ளனா். கொள்ளையடிக்கப்பட்ட 4.5 கிலோ நகைகளில், 3.250 கிலோ நகைகள் மீட்கப்பட்டுள்ளன.
கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் திருப்புடைமருதூா் ரத்தினவேல்பாண்டியன் காலனியைச் சோ்ந்த இசக்கிபாண்டி என்பவா் வீட்டுத் தோட்டத்திலிருந்து மீட்கப்பட்டன. இதில், சுதாகா், ஐயப்பன், மருதுபாண்டி, 2 இளம்சிறாா் ஆகிய 5 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். மேலும், அழகுசுந்தரம் உள்ளிட்ட இருவா் தேடப்பட்டு வருகின்றனா். விரைவில் அவா்கள் கைது செய்யப்படுவா் என்றாா் அவா்.