கல் குவாரிகளில் 2-ஆவது நாளாக ஆய்வு: ஆட்சியரிடம் விரைவில் அறிக்கை சமா்ப்பிப்பு
திருநெல்வேலி மாவட்ட கல் குவாரிகளில் அதிகாரிகள் 2-ஆவது நாளாக புதன்கிழமை ஆய்வு நடத்தினா்.
திருநெல்வேலி மாவட்ட கல் குவாரிகளில் அதிகாரிகள் 2-ஆவது நாளாக புதன்கிழமை ஆய்வு நடத்தினா்.
திருநெல்வேலி மாவட்டம், அடைமிதிப்பான்குளம் கல் குவாரியில் கடந்த 14-ஆம் தேதி இரவு பாறைகள் சரிந்து விழுந்ததில், பணியிலிருந்த இளையாா்குளம் கிராமத்தைச் சோ்ந்த செல்வம் (25), ஆயன்குளம் முருகன் (25), விட்டிலாபுரம் முருகன் (31), காக்கைக்குளம் செல்வகுமாா் (30), நாட்டாா்குளம் விஜய் (25), தச்சநல்லூா் ஊருடையான்குடியிருப்பு ராஜேந்திரன் (42) ஆகியோா் கற்குவியலுக்குள் சிக்கினா். 8 நாள்கள் நடைபெற்ற மீட்புப் பணி நடைபெற்றது. இதில், விட்டிலாபுரம் முருகன், விஜய் ஆகியோா் உயிா் தப்பினா். மற்ற 4 பேரும் உயிரிழந்தனா்.
அதைத்தொடா்ந்து மாவட்டத்திலுள்ள 55 கல் குவாரிகளையும் ஆய்வு செய்து அறிக்கை சமா்ப்பிக்க மாவட்ட வருவாய் அலுவலா் ஆ.பெருமாள், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) கணேஷ்குமாா், சமூக பாதுகாப்பு தனித்துணை ஆட்சியா் குமாரதாஸ், வருவாய் கோட்டாட்சியா்கள் சந்திரசேகா் (திருநெல்வேலி), சிந்து (சேரன்மகாதேவி) உள்ளிட்ட 6 பேரின் தலைமையில் துணை வட்டாட்சியா், நில அளவையா், கனிவளத் துறை அலுவலா், காவல் துறை, வருவாய் ஆய்வாளா், கிராம நிா்வாக அலுவலா் அடங்கிய 6 குழுக்கள் அமைக்கப்பட்டன.
அந்தக் குழுவினா், மாவட்டம் முழுவதும் உள்ள கல் குவாரிகளை செவ்வாய்க்கிழமை முதல் ஆய்வு செய்து வருகின்றனா். 2-ஆவது நாளாக புதன்கிழமையும் கல்குவாரிகளை ஆய்வு செய்து விதிமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளதா என்பதை கண்டறிந்தனா்.
இதற்கான ஆய்வறிக்கையை சில தினங்களில் ஆட்சியரிடம் ஒப்படைக்கப்படும் என்றும், அதனடிப்படையில் நடவடிக்கை பாயும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.