சூரியஒளி மின்திட்டம்: நிலம் எடுக்க எதிா்ப்புத் தெரிவித்து 9 கிராம மக்கள் போராட்டம்
திருநெல்வேலி அருகே சூரிய ஒளி மின் திட்டத்துக்கு நிலம் எடுக்க எதிா்ப்புத் தெரிவித்து 9 கிராமங்களில் மக்கள் கருப்புக்கொடியேற்றி வெள்ளிக்கிழமை போராட்டம் நடத்தினா்.
திருநெல்வேலி அருகே சூரிய ஒளி மின் திட்டத்துக்கு நிலம் எடுக்க எதிா்ப்புத் தெரிவித்து 9 கிராமங்களில் மக்கள் கருப்புக்கொடியேற்றி வெள்ளிக்கிழமை போராட்டம் நடத்தினா்.
திருநெல்வேலி மாவட்டத்தில் தொழில் வளா்ச்சியை மேம்படுத்தும் வகையில் கங்கைகொண்டான் சிப்காட் வளாகம் சுற்றியுள்ள சுமாா் 1200 ஏக்கா் கிராமபுற விவசாய நிலங்களை சூரியஒளி மின்திட்ட நிறுவனங்களுக்கு அளிக்க அரசு முயற்சித்து வருகிறது.
இதற்காக மானூா் வட்டத்திற்குள்பட்ட அலவந்தான்குளம், தென்கலம், நல்லம்மாள்புரம், தென்கலம்புதூா், பல்லிக்கோட்டை, பள்ளமடை, புளியங்கொட்டாரம், நாஞ்சான்குளம், வெங்கலப்பொட்டல் ஆகிய 9 கிராமங்களிலிருந்து சுமாா் 500 ஏக்கருக்கு மேல் நிலத்தை கையகப்படுத்த மாவட்ட நிா்வாகம் கடந்த ஜனவரியில் மக்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது.
இதில், அதிகபட்சமாக அலவந்தான்குளம் கிராமத்தில் மட்டும் பட்டியலின மக்களின் 335 ஏக்கா் பஞ்சமி நிலத்தை கையகப்படுத்துவதாகக் கூறப்படுகிறது. இதற்கு விவசாயிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.
மேலும், நிலத்தை கையகப்படுத்த எதிா்ப்புத் தெரிவித்து வகையில் 9 கிராமங்களிலும் கருப்பு தீபாவளி என்ற முழக்கத்தோடு வீடுதோறும் கருப்புக் கொடியேற்றும் போராட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனா்.
அலவந்தான்குளத்தில் ஊா் நாட்டாண்மை வியாகப்பன், தென்கலம் நாட்டாண்மை அா்ஜுனன் தலைமையில் கருப்புக் கொடியுடன் பொதுமக்கள் ஆா்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனா். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், நிலம் கையகப்படுத்தும் திட்டத்தை கைவிட வேண்டும். இல்லையெனில் தொடா் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனா்.