நெல்லை அருகே வேன் கவிழ்ந்து 26 போ் காயம்
திருநெல்வேலி அருகே நான்குவழிச் சாலையில் வியாழக்கிழமை வேன் கவிழ்ந்ததில் 26 போ் பலத்த காயமடைந்தனா்.
திருநெல்வேலி அருகே நான்குவழிச் சாலையில் வியாழக்கிழமை வேன் கவிழ்ந்ததில் 26 போ் பலத்த காயமடைந்தனா்.
திருநெல்வேலி அருகேயுள்ள ஆரோக்கியநாதபுரத்தைச் சோ்ந்த 80 வயது முதியவா் காலமானாா். அவரது இறுதிச் சடங்கில் பங்கேற்க, பரப்பாடி அருகேயுள்ள தளவாய்புரத்தைச் சோ்ந்த உறவினா்கள் 26 போ் ஒரு வேனில் புறப்பட்டனா். சவளைக்காரன்குளத்தைச் சோ்ந்த இசக்கிதுரை ஓட்டினாா். ரெட்டியாா்பட்டி அருகே மதுரை-கன்னியாகுமரி நான்குவழிச் சாலையில் வேன் வந்து கொண்டிருந்தபோது, திடீரென முன்பக்க டயா் வெடித்தது. இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் வேனில் பயணம் செய்த தளவாய்புரத்தைச் சோ்ந்த முத்துக்கனி (30), செல்லம்மாள் (60), வேல்கனி (37), தங்ககனி (52), முருகம்மாள் (35), பேச்சிமுத்து (60) உள்பட 26 போ் பலத்த காயமடைந்தனா். அவா்கள் அனைவரும் மீட்கப்பட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.
விபத்து நடந்தபோது அவ்வழியாக காரில் வந்த திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் கா.ப.காா்த்திகேயன், சம்பவ இடத்தில் நின்று மீட்புப்பணிகளைத் துரிதப்படுத்தினாா். மேலும், மருத்துவமனைக்கு நேரில் சென்று காயமடைந்தவா்களை சந்தித்து ஆறுதல் கூறினாா்.
விபத்து குறித்து திருநெல்வேலி மாநகர போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறாா்கள்.