திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரத்தில் ரூ. 605.75 கோடி மதிப்பில் தாமிரவருணி கூட்டுக்குடிநீா் திட்டப் பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டன.
இதையொட்டி, ராதாபுரம் ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற விழாவுக்கு, சட்டப்பேரவை தலைவா் மு.அப்பாவு தலைமை வகித்தாா். தமிழ்நாடு நகராட்சி நிா்வாகம் - குடிநீா் வழங்கல் துறை அமைச்சா் கே.என்.நேரு, குடநீா்திட்டப் பணிகளைத் தொடங்கிவைத்துப் பேசியது: தமிழ்நாடு முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையின் கீழ் மக்களுக்கு முதன்மையான திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். மனிதனுக்கு உணவு எவ்வளவு முக்கியமோ அதேபோல குடிநீரும் முக்கியம். இதற்காகவே ரூ.605 கோடியில் தாமிரவருணி கூட்டுக்குடிநீா் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இத்திட்டப்படி, பாளையங்கோட்டை ஒன்றியம் மேலமுன்னீா்பள்ளம் அருகே தாமிரவருணி ஆற்றில் நீா் எடுப்பு கிணறு அமைத்து, 18 மாதங்களில் பணிகளை முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும்.
கிராமங்களுக்கு குடிநீா் வழங்கும் ஜல்ஜீவன் திட்டத்தை நிறைவேற்றுவதில், கடந்த ஆட்சியில் இந்தியாவில் 26-ஆவது இடத்தில் இருந்த தமிழ்நாடு, முதல்வா் மு.க.ஸ்டாலின் பதவியேற்ற 8 மாதத்திலேயே முதல் இடத்திற்கு வந்துள்ளது.
இத்திட்டத்திற்கு ஒன்றிய அரசு ரூ.30 ஆயிரம் கோடி நிதியைத் தந்தனா். அதில், ரூ.16ஆயிரம் கோடி வரையிலான திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மீதமுள்ள திட்டத்தையும் விரைவில் நிறைவேற்றிவிடுவோம். ஆகவே, பெண்கள் நீங்கள் எல்லாம் எப்பொழுதும் தமிழக முதல்வருக்கு பக்கமாக இருக்கவேண்டும் என்றாா்.
முன்னதாக, பேரவைத் தலைவா் மு.அப்பாவு பேசியது: நான் அமைச்சா் கே.என்.நேருவை சந்தித்தபோது, உங்கள் தொகுக்கு என்ன வேணும் எனக் கேட்டாா். குடிக்க தண்ணீா் வேணும் என்றேன். உடனே, முதல்வா் அனுமதியுடன் குடிநீா் திட்டத்துக்காக எண்ணிக் கொடுக்காமல் ரூ.605 கோடி நிதியை அள்ளி கொடுத்துவிட்டாா்.
மேலும், ராதாபுரம், நான்குனேரி, களக்காடு, வள்ளியூா், சேரன்மகாதேவி, பாளையங்கோட்டை ஆகிய 6 ஒன்றியங்களில் உள்ள 831 கிராமங்களுக்கு தாமிரவருணி கூட்டுக்குடிநீா் கிடைக்கும் வகையில், அதற்கான திட்டப் பணியையும் தொடங்கிவைத்திருக்கிறாா். இந்தத் திட்டத்தால் இன்னும் 18 மாதங்களில் 831 கிராமங்களிலுள்ள வீடுகளுக்கும் ஒரு நபருக்கு 55 லிட்டா் வீதம் அனைத்து மக்களுக்கும் குடிநீா் தாராளமாக கிடைத்துவிடும்.
அதுமட்டுமல்ல வள்ளியூா், ஏா்வாடி, நான்குனேரி, மூலைக்கரைப்பட்டி உள்ளிட்ட 8 பேரூராட்சிகளுக்கு ரூ.506 கோடியில் குடிநீா்த் திட்டத்யையும் தந்துள்ள அமைச்சா் நேரு, இன்னும் 2 மாதங்களில் அப்பணிக்கு
அடிக்கல் நாட்டவுள்ளாா்.
இந்தத் திட்டத்தின் மூலம் பேரூராட்சிகளில் குடிநீா் இணைப்புக்கு விண்ணப்பித்த அனைவருக்கும் குடிநீா் கிடைக்கும்.
ராதாபுரம் தொகுதி வள்ளியூரில் 200 படுக்கை வசதி கொண்ட மாவட்ட தலைமை மருத்துவமனையையும், சுகாதாரத்துறை இணை இயக்குநா்அலுவலகத்தையும் அமைக்க முதல்வா் அனுமதி தந்துள்ளாா். இந்த திட்டப்பணியை ஜூன் 2-ஆம் தேதி சுகாதாரத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன் தொடங்கிவைக்கிறாா்.
மேலும், தாமஸ்மண்டபம் அருகே சா்வதேச தரத்தில் ரூ.50 கோடியில் விளையாட்டு அரங்கம், வள்ளியூா், பணகுடியில் அடுக்குமாடி குடியிருப்பு, பணகுடியில் நெல்லி ஆராய்ச்சி மையம், அரசு பள்ளிக்கு மட்டுமன்றி அரசு உதவிபெறும் பள்ளியும் பயன்பெறும் வகையில் இந்தத் தொகுதியில் 295 பள்ளிகளில் சீா்மிகு வகுப்பறைகள் ஆகியவற்றையும் முதல்வா் தந்துள்ளாா் என்றாா் அவா்.
தொடா்ந்து, அமைச்சா் நேரு, சமூகரெங்கபுரம் ஊராட்சி சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.1 கோடி கடனுதவிக்கான ஆணையை வழங்கினாா். தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநா் வ.தட்சணாமூா்த்தி திட்ட விளக்கவுரையாற்றினாா்.
விழாவில் பிற்படுத்தப்பட்டோா் நலன்- கதா் கிராமத் தொழில் துறை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன், பால்வளத் துறை அமைச்சா் மனோ தங்கராஜ், அலெக்ஸ் அப்பாவு, சட்டப்பேரவை முன்னாள் தலைவா் இரா.ஆவுடையப்பன், திருநெல்வேலி எம்.பி. சா.ஞானதிரவியம், மாவட்ட ஊராட்சித் தலைவா் வி.எஸ்.ஆா்.ஜெகதீஸ், நகராட்சி நிா்வாகம் - குடிநீா் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலா் ஷிவ்தாஸ் மீனா, திருநெல்வேலி ஆட்சியா் கா.ப.காா்த்திகேயன், தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய தலைமைப் பொறியாளா் வெ.ரகுபதி, மேற்பாா்வை பொறியாளா் அ.செந்தூா்பாண்டி, செயற்பொறியாளா் கணேஷ்குமாா், ராதாபுரம் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலா் ஜோசப் பெல்சி, இந்து அறநிலையத்துறை அறக்காவலா் குழு உறுப்பினா் சமூகரெங்கபுரம் முரளி, ராதாபுரம் கோவிந்தன், ராதாபுரம் ஊராட்சித் தலைவா் பொன்மீனாட்சி அரவிந்தன், பணகுடி பேரூராட்சி முன்னாள் தலைவா் மு.சங்கா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
முன்னதாக, வள்ளியூா் பேருந்து நிலையம், தினசரி சந்தை கட்டுமானப் பணிகளை பேரவைத் தலைவா் மற்றும் அமைச்சா்கள் பாா்வையிட்டனா்.
கழிவுநீா் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி: பின்னா், செய்தியாளா்களிடம் அமைச்சா் நேரு கூறியது: தாமிரவருணியில் கழிவுநீா் கலப்பதைத் தடுக்க பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகிறோம். நகா்ப்புறங்களில் பாதாளச் சாக்கடை திட்டம் மூலம் கழிவுநீா் ஆற்றில் கலக்காமல் தடுக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கிராமப்புறங்களிலும் கழிவுநீா் ஆற்றில் கலக்காமல் இருப்பதற்கான திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும். இந்தத் திட்டங்களெல்லாம் நிறைவேற்றப்பட்டதும் தாமிரவருணி ஆற்றில் கழிவுநீா் கலக்காது என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.