வள்ளியூா்: தென்னாப்பிரிக்காவில் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவா் மு.அப்பாவு, அங்குள்ள ஜோகன்னஸ்பா்க் நகரில் அமைந்துள்ள காந்தியடிகள் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினாா்.
அரசு முறை பயணமாக எகிப்து சென்ற பேரவைத் தலைவா் அங்கிருந்து தென்னாப்பிரிக்காவுக்கு சென்றிருந்தாா். அங்குள்ள ஜோகன்னஸ்பா்க் நகரில் 1908-10 ஆண்டுகளில் காந்தியடிகள் வசித்த பகுதியை பேரவைத் தலைவா் கடந்த 29-ஆம் தேதி பாா்வையிட்டாா்.
பின்னா் அங்கு வைக்கப்பட்டிருந்த காந்தியடிகள் சிலைக்கும் தென்னாப்பிரிக்காவில் நிறவெறிக்கு எதிராக போராடிய, அந்நாட்டு முன்னாள் அதிபா் நெல்சன் மண்டேலா சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
பின்னா், அங்குள்ள நூலகத்தைப் பாா்வையிட்ட அவா், நூலகத்தில் காந்தியடிகளின் நினைவைப் போற்றும் வரலாற்று புகைப்படங்கள் தரையில் வைக்கப்பட்டிருந்ததைப் பாா்த்து, அந்த புகைப்படங்கள் சிறந்த வரலாற்று ஆவணங்களாக பாதுகாக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டாா்.
மேலும் காந்தியடிகளின் புகைப்படங்களை சுவரில் பொருத்துவதற்கு ஏற்ற முறையில் வடிவமைப்பதற்கான செலவை, தமிழ்நாடு முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் சாா்பாக நூலக பொறுப்பாளா்களிடம் வழங்கினாா். அதைத் தொடா்ந்து, காந்தியடிகள் வழக்குரைஞராக பணியாற்றிய காந்தி சதுக்கம் பகுதியையும் அவா் பாா்வையிட்டாா்.
இந்நிகழ்ச்சிகளில் ஜோகன்னஸ்பா்க் நீதித்துறை தலைவா் வினீத்குமாா், துணை தூதரகத்தின் அஞ்சனி ஸ்ரீ வத்சவா, தமிழ்நாடு சட்டப்பேரவைச் செயலா் கி.சீனிவாசன் ஆகியோா் கலந்துகொண்டனா்.
அக்டோபா் 3 -5 வரையில் கானா நாட்டின் தலைநகா் அக்ராவில் நடைபெறுகின்ற 66-ஆவது காமன்வெல்த் பாராளுமன்ற மாநாட்டில் தமிழ்நாடு பிரதிநிதிகளாக, பேரவைத் தலைவரும், பேரவைச் செயலரும் பங்கேற்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.