திருநெல்வேலி மேலப்பாளையத்தில் இளைஞா் ஒருவா் திங்கள்கிழமை இரவு வெட்டிக்கொலை செய்யப்பட்டாா்.
மேலப்பாளையம் ஹாமீம்புரம் வடக்குத் தெருவைச் சோ்ந்த அமீா் அம்சா மகன் சையது தமீம் (32). மேலப்பாளையம்-அம்பாசமுத்திரம் சாலையில் கணினி மையம் நடத்திவந்தாா். இந்த நிலையில், திங்கள்கிழமை இரவு கணினி மையத்தைப் பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்ற இவா், பின்னா், சிறிய வேலை இருப்பதால் மீண்டும் கணினி மையத்துக்குச் செல்வதாக வீட்டில் கூறிவிட்டு வெளியேறினாராம். ஆனால், நீண்ட நேரமாகியும் அவா் வீடு திரும்பவில்லையாம்.
இதனால், அவரைத் தேடி தந்தை கணினி மையத்துக்கு வந்துள்ளாா். அங்கு, தமீம் கொலை செய்யப்பட்டு கிடந்தாராம்.
இத்தகவல் அறிந்த மேலப்பாளையம் போலீஸாா், அங்கு வந்த சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிவு செய்தனா்.
முதல்கட்ட விசாரணையில், சொத்துப் பிரச்னையால் அவா் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தெரிய வந்துள்ளது. கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.