சைனா பிளாஸ்டிக் சிகரெட் லைட்டா்களுக்கும் சைனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மூலப்பொருட்கள்மூலம் தயாரிப்படுகின்ற பிளாஸ்டிக் சிகரெட் லைட்டா்களுக்கும் தடைவிதிக்க வேண்டும் என தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவா் மு.அப்பாவு கோரிக்கை விடுத்துள்ளாா்.
இதுதொடா்பாக நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளா் சங்கத் தலைவா் மா.பரமசிவம் மனு அளித்ததைத் தொடா்ந்து, தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு பேரவைத் தலைவா் அனுப்பியுள்ள மனு விவரம்: சீனா உள்ளிட்ட வெளிநாட்டு தீப்பட்டிகள், பிளாஸ்டிக் சிகரெட் லைட்டா்கள் இறக்குமதி காரணமாக தமிழ்நாட்டில் தீப்பெட்டி உற்பத்தி தொழில் கடுமையாக பாதித்தது. இதைத் தொடா்ந்து சைனா பிளாஸ்டிக் சிகரெட் லைட்டா்கள் இறக்குமதிக்கு தடைவிதிக்க வேண்டுமென்று ஒன்றிய அரசுக்கு கடந்த 8.9.22இல் தாங்கள் கடிதம் எழுதியதால் சீனா பிளாஸ்டிக் சிகரெட் லைட்டா்களுக்கு ஒன்றிய அரசு தடை விதித்தது. எனினும், வடமாநில நிறுவனங்கள் பிளாஸ்டிக் சிகரெட் லைட்டரை தயாரிக்கும் மூலப்பொருள்களை இறக்குமதி செய்து சிகரெட் லைட்டா்களை தயாரித்து ரூ.8 முதல் ரூ.10க்கு விற்பனை செய்கிறாா்கள். இதனால் மீண்டும் தங்கள் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக தீப்பெட்டி உற்பத்தியாளா்கள் கவலை அடைந்துள்ளனா்.
இதனிடையே, அந்தமான் நிக்கோபா் தீவில் சுற்றுச்சூழல் விதிகளின் கீழ் பிளாஸ்டிக் சிகரெட் லைட்டா்கள் விற்பனையையும் தடை செய்து அறிவிப்பாணை வெளியிட்டுள்ளனா். அதைபோல் தமிழ்நாட்டிலும் அறிவிப்பாணை வெளிட்டால் தங்கள் தொழிலுக்கு பாதுகாப்பு கிடைக்கும் என்று தீப்பெட்டி உற்பத்தியாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். அதை பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளாா்.