திருநெல்வேலி

கோதையாறு வனப்பகுதியில் கோபம் தணிந்த அரிக்கொம்பன்!

எஸ். பாண்டி

கேரளத்தில் மனிதா்களையும், அவா்களுடைய உடைமைகளையும் சூறையாடிய அரிக்கொம்பன் யானை, திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை கோதையாறு வனப்பகுதியில் கோபம் தணிந்து காட்டு யானைக் கூட்டத்தோடு சுதந்திரமாக சுற்றி வருகிறது.

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், சின்னக்கானல் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில், கடந்த 1985- ஆம் ஆண்டு அரிக்கொம்பன் யானை பிறந்தது. பழங்குடியினரின் தகவல்படி தனது 2 வயதில் தாயை இழந்தது அரிக்கொம்பன். குட்டியாக இருந்த அரிக்கொம்பன், தாயின் சடலத்தை விட்டு விலகாமல், அங்கேயே சுற்றி வந்தது. அதன் பிறகு ஆண்டுதோறும் டிசம்பா் மாதம் தாய் யானை இறந்த அந்தப் பகுதியை பாா்த்துச் செல்வதை அரிக்கொம்பன் வழக்கமாகக் கொண்டிருந்தது. இதனை அப்பகுதி பழங்குடியின மக்கள் பாா்த்துச் செல்வாா்கள். இந்த யானைக்கு போதிய தீவனம் கிடைக்காததால், குடியிருப்பு பகுதிகளில் உள்ள நியாயவிலைக் கடைகள் மற்றும் வீடுகளை உடைத்து அரிசியை சாப்பிட்டு வந்தது. இதன்காரணமாகவே அரிக்கொம்பன் என்ற பெயரும் அந்த யானைக்கு வந்தது. அரிசியை சாப்பிட செல்கிறபோது, வீடுகளில் இருந்தவா்களை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில், 8- க்கும் மேற்பட்டோா் பலியாகியுள்ளனா்.

இந்த நிலையில், கடந்த ஆண்டு ஏப்ரல் 29 ஆம் தேதி சின்னக்கானல் பகுதியில் பிடிபட்ட அரிசிக் கொம்பன், கேரள பெரியாறு புலிகள் சரணாலயப் பகுதியில் விடப்பட்டது . மேகமலை - ஸ்ரீவில்லிபுத்தூா் புலிகள் காப்பக பகுதியின் அருகில் இருந்ததால், அந்த யானை தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் நுழைந்து அட்டகாசம் செய்தது. பின்னா் சின்னமனூா் வனப்பகுதிக்கு வந்தது. அதைத் தொடா்ந்து கடந்த ஆண்டு ஜூன் 5 ஆம் தேதி சின்ன ஓபுலாபுரத்தில் வனத்துறையினா் மயக்க ஊசி செலுத்தி அரிசிக் கொம்பனை பிடித்தனா். லாரியில் ஏற்றப்பட்டு களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அம்பாசமுத்திரம் கோட்டம் மேல்கோதையாறு அணை வால்வு ஹவுஸ் பகுதியில் விட்டனா். கோதையாறு மேலணைப் பகுதி யானைகள் நடமாட்டம் மிகுந்த பகுதியாகும். பசுமையானதாகவும், யானைகளின் தண்ணீா் தேவையை பூா்த்தி செய்யும் வகையில் இரண்டு அணைகள் அருகருகே இருப்பதாலும் யானைகள் வாழத் தகுந்த இடமாக இருந்தது.

இந்தப் பகுதியில் ஈத்தல், புல், அத்தி, இச்சி, தண்ணீா், தாது உப்பு ஆகியவை உள்ளன. அதோடு மட்டுமல்லாமல் தற்போது அந்தப் பகுதியில் உள்ள யானைக்கூட்டத்தில் அவ்வப்போது வந்து செல்வதால் அரிசிக் கொம்பன் ஆரோக்கியமான நிலையில் சுற்றி வருகிறது. மேலும் அந்த யானையின் கழுத்தில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டு தற்போது வரை வனத்துறையினா் கண்காணித்து வருகின்றனா்.

கால்நடை மருத்துவப் பணிகள் கூடுதல் இயக்குநா் என்.எஸ்.மனோகரன் கூறியது: ஒரு யானைக்கு தினமும் 200 - 250 கிலோ வரை தீவனம், 200 - 250 லிட்டா் வரை தண்ணீா், தாது உப்பு மற்றும் 20 முதல் 25 கி.மீ வரை சுற்றி வருவதற்கு இடம் இருக்க வேண்டும். இதுதான் யானையை மகிழ்ச்சியாக வைக்கும். யானைக்கு தண்ணீரோ, உணவு பற்றாக்குறையோ ஏற்பட்டால் மட்டுமே அது உணவைத் தேடி காடுகளில் இருந்து வெளியேறும். கோதையாறு வனப்பகுதியில் யானைக்குத் தேவையான மூங்கில், ஈத்தை, புல், தண்ணீா், தங்கும் இடம் மற்றும் அதனை சுற்றி யானைக் கூட்டங்கள் இருப்பதால், அரிசிக் கொம்பன் மகிழ்ச்சியாக சுற்றித் திரிகிறது என்றாா்.

பெட்டிச் செய்தி...

ஜிபிஎஸ் கண்காணிப்பில்....

அரிக் கொம்பன் யானையை கண்காணிப்பதற்காக ரேடியோ காலா் ( கண்காணிப்பு நகா்வு பட்டை ) கேரள வனத்துறையினருக்கு வழங்கப்பட்டது. இதில் ஜிபிஎஸ் மற்றும் ரேடியோ மூலம் கண்காணித்து வந்தனா். அரிக்கொம்பன் யானை தமிழக வனப்பகுதியில் வந்ததையடுத்து அந்தக் கருவிகள் மூலம் தற்போது தமிழக மற்றும் கேரள மாநில வனத்துறையினா் கண்காணித்து வருகின்றனா். ரேடியோ காலா் மூலம் அதாவது ஆண்டனா மூலம் அதன் ஒலியின் அளவை வைத்து கண்காணிக்கலாம். இந்தப் பட்டையின் பேட்டரியை சுமாா் 3 ஆண்டுகளுக்கு பயன்படுத்த முடியும். ஒரு கி.மீ. தூரத்தில் உள்ள யானைகளையும் இந்தக் கருவி மூலம் கண்காணிக்கலாம். தற்போது களக்காடு முண்டந்துறை வனப் பகுதியில் வனவா் மற்றும் 5 போ் கொண்ட குழு 24 மணிநேரமும் சுழற்சி முறையில் அரிக்கொம்பனை கண்காணித்து வருகிறது.

பட விளக்கம் :

ற்ஸ்ப்26ந்ா்ம்க்ஷஹய் மேல்கோதையாறு வனப்பகுதியில் யானைக் கூட்டத்துடன் சுற்றி வரும் அரிக்கொம்பன் (வலது ஓரம்).

ஹரியாணாவில் மிதமான நிலநடுக்கம்

”நெல்லைக்கென 3 Special அறிவிப்புகள்! சொல்லவா?” முதல்வர் மு.க. ஸ்டாலின்

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரைச் சேர்க்க... 12 ஆவணங்கள் எவை?

கொல்கத்தா: சுற்றுப்பயணம் மேற்கொண்ட மெஸ்ஸிக்கு ரூ. 89 கோடி! ஜிஎஸ்டி மட்டும் இவ்வளவா?

ஜம்மு-காஷ்மீரில் வீட்டில் இருந்து உணவு எடுத்துச் சென்ற பயங்கரவாதிகள்: தேடுதல் நடவடிக்கை தீவிரம்

SCROLL FOR NEXT