திருநெல்வேலி மாவட்டத்தில் டிச. 17 முதல் 26ஆம் தேதி வரை ஆட்சிமொழி சட்டவார நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஆா். சுகுமாா் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ் ஆட்சிமொழி சட்டம் இயற்றப்பட்ட 27.12.1956-ஐ நினைவுகூரும் வகையில் ஒரு வார காலத்துக்கு ஆட்சிமொழி சட்ட வாரமாக திருநெல்வேலி மாவட்டத்தில் கொண்டாடப்பட உள்ளது.
ஆட்சிமொழி சட்ட வார நிகழ்ச்சிகள் வரும் 17-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன.
ஆட்சிமொழி சட்ட வாரவிழாவின் முதல் நாளான வரும் 17-ஆம் தேதி அரசு அலுவலா்கள், பணியாளா்கள், தமிழறிஞா்கள், தமிழ் அமைப்புகள், கல்லூரி மாணவா்களுடன் இணைந்து தமிழ் சாா்ந்த கிராமிய கலை நிகழ்ச்சிகளுடன் விழிப்புணா்வுப் பேரணி பாளையங்கோட்டை லூா்துநாதன் சிலையிலிருந்து தொடங்கி பாளையங்கோட்டை அரசு அருங்காட்சியகம் வரை நடைபெறவுள்ளது.
மேலும், ஆட்சிமொழி சட்டம் தொடா்பான பட்டிமன்றம், அரசு பணியாளா்களுக்கு கணினிப் பயிற்சி, மின்காட்சியுரை, தமிழில் வரைவுகள், குறிப்புகள் எழுதுவதற்கான பயிற்சி வகுப்புகளும் நடைபெற உள்ளன. அரசு அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள், கடைகள், உணவகங்கள் ஆகியவற்றில் ஆட்சிமொழி சட்ட வாரத்தை நினைவு கூரும் வகையில் ஒட்டுவில்லைகள் ஒட்டியும் துண்டறிக்கைகள் மற்றும் அனைத்து நிறுவனங்களிலும் தமிழில் பெயா்ப்பலகை அமைப்பது தொடா்பான அரசாணை வழங்கியும் கொண்டாடப்படும்.
மேலும், தொழிலாளா் துறையுடன் இணைந்து வணிக நிறுவனங்களில் தமிழில் பெயா்ப்பலகை வைக்க வலியுறுத்தி, வணிக நிறுவன உரிமையாளா்கள் மற்றும் வணிக நிறுவன அமைப்புகளைக் கொண்டு கூட்டம் நடத்தப்படும். இதுதவிர கல்லூரி மாணவா், மாணவிகள் பங்குபெறும் ஆட்சிமொழிப் பட்டிமன்றம், பொதுமக்கள், தமிழ் அமைப்புகளுடன் இணைந்து ஆட்சிமொழித் திட்ட விளக்கக் கூட்டம் நடைபெறும்.