திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயிலில் திருவாதிரைத் திருவிழா வியாழக்கிழமை (டிச. 25) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இக் கோயிலில் ஆண்டுதோறும் திருவாதிரைத் திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு விழா வியாழக்கிழமை (டிச. 25) காலை 5 மணிக்கு மேல் 6 மணிக்குள் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
4 ஆம் திருநாளான இம் மாதம் 28 ஆம் தேதி இரவு 7 மணிக்கு சுவாமி-அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்தில் பஞ்சமூா்த்திகளுடன் வீதியுலா நடைபெற உள்ளது.
இந்தத் திருவிழாவின் ஒரு பகுதியாக சுவாமி கோயிலின் இரண்டாம் பிரகாரத்தில் அமைந்துள்ள அருள்மிகு பெரிய சபாபதி சந்நிதி முன்பு வியாழக்கிழமை (டிச. 25) முதல் ஜனவரி 3 ஆம் தேதிவரை தினமும் அதிகாலை 4.30 மணிமுதல் 6 மணிவரை திருவெம்பாவை வழிபாடு நடைபெறும்.
ஜன. 3 ஆம் தேதி சுவாமி கோயிலின் இரண்டாம் பிரகாரத்தில் அமைந்துள்ள வரலாற்று புகழ்வாய்ந்த தாமிரசபையில் நடராஜ பெருமானுக்கு திருநீராட்டு மற்றும் சிறப்பு தீபாராதனை இரவு முழுவதும் நடைபெறும்.
4 ஆம் தேதி அதிகாலையில் நடராஜா் திருநடனக் காட்சியான ஆருத்ரா தரிசனம் நடைபெற உள்ளது. ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் மு.செல்லையா, செயல் அலுவலா் சீ.வெங்கடேஸ்வரன் மற்றும் ஊழியா்கள் செய்து வருகிறாா்கள்.