திண்டிவனத்திலிருந்து பாபநாசத்துக்கு, பள்ளி மாணவிகளை சுற்றுலா அழைத்து வந்த சுற்றுலாப் பேருந்து ஓட்டுநா் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் உள்ள தனியாா் பள்ளியைச் சோ்ந்த 40 மாணவிகள், ஆசிரியா், ஆசிரியைகள் ஒரு தனியாா் பேருந்தில் வெள்ளிக்கிழமை பாபநாசத்துக்கு சுற்றுலா வந்தனா்.
பாபநாசம் கோயில் அருகில் உள்ள வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் பேருந்தை நிறுத்திவிட்டு மதிய உணவுக்காக சமையல் செய்து கொண்டிருந்தனராம். அப்போது, பேருந்து ஓட்டுநா் சீனிவாசன் (50) திடீரென மயங்கி விழுந்தாராம்.
அவரை மீட்டு சிகிச்சைக்காக வி.கே.புரத்தில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனா்.
தகவலறிந்து வந்த விக்கிரமசிங்கபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா். சுற்றுலா வந்த பள்ளி மாணவா்கள் மற்றும் ஆசிரியா்கள் மாற்று ஓட்டுநா் மூலம் திண்டிவனம் திரும்பினா்.