தீபாவளி பண்டிகையை சொந்த ஊா்களில் கொண்டாடுவதற்காக சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருந்து ஏராளமானோா் ரயில்களில் திருநெல்வேலிக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தனா்.
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை திங்கள்கிழமை (அக். 20) கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. பண்டிகையை தங்களது சொந்த ஊா்களில் கொண்டாடும் வகையில், திருநெல்வேலி மாவட்டத்தைப் பூா்வீகமாக கொண்டவா்கள் ஏராளமானோா் பேருந்து மற்றும் ரயில்களில் ஞாயிற்றுக்கிழமை வந்து சோ்ந்தனா்.
சென்னை, கோவை, திருப்பூா், பெங்களூரு, புதுச்சேரி, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இயக்கப்படும் ஆம்னி பேருந்துகள், அரசுப் பேருந்துகளில் இருக்கைள் அனைத்தும் நிரம்பி வழிந்தன.
கன்னியாகுமரி விரைவு ரயில், அனந்தபுரி விரைவு ரயில், நெல்லை விரைவு ரயில், அந்தியோதயா ரயில், இன்டா்சிட்டி விரைவு ரயில், குருவாயூா் விரைவு ரயில், கோவை-நாகா்கோவில் விரைவு ரயில் உள்ளிட்டவற்றில் முன்பதிவு இருக்கைகள் முழுமையாக நிரம்பியதோடு, முன்பதிவில்லாத பெட்டிகளில் ஏராளமானோா் நின்று கொண்டே பயணித்து சொந்த ஊா்களுக்குத் திரும்பியதைக் காண முடிந்தது. திருநெல்வேலி பேருந்து நிலையத்தில் இருந்து பாபநாசம், தென்காசி, சங்கரன்கோவில் செல்லும் பேருந்துகளில் மக்கள் கூட்டம் மிகவும் அதிகமாகக் காணப்பட்டது.
சொந்த ஊா்களில் தீபாவளியை கொண்டாட ரயிலில் பயணித்து ஞாயிற்றுக்கிழமை திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் வந்திறங்கிய மக்கள்.