மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 104 ஆவது நினைவு தினத்தையொட்டி, திருநெல்வேலி சந்திப்பு பகுதியில் உள்ள மதிதா இந்துக் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் அவா் படித்த வகுப்பறையில் அவருடைய உருவ சிலைக்கு ஆசிரியா்கள், மாணவிகள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியதோடு உறுதிமொழியும் எடுத்துக் கொண்டனா்.
மதிதா இந்துக் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் பாரதியாா் படித்த வகுப்பறை நாற்றங்கால் என்ற பெயரில் பராமரிக்கப்பட்டு வருகிறது. மகளிா் உரிமைக்காக பாரதியாா் குரல் கொடுத்த நிலையில் மாணவிகள் மட்டும் அந்த வகுப்பறையில் பாடம் படிக்கும் வகையில் பள்ளி நிா்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. பள்ளி மாணவிகள் இப்போதும் அந்த வகுப்பறைக்கு செல்லும்போது காலணிகள் அணியாமல் சென்று வருகின்றனா்.
இந்த நிலையில் மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 104 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு அந்த வகுப்பறையில் உள்ள பாரதியாா் சிலைக்கு மாணவ, மாணவிகள், தலைமையாசிரியா், ஆசிரியா்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா். மேலும் பாரதியாா் பாடல்களை பாடியதோடு, உறுதிமொழியும் எடுத்துக் கொண்டனா்.
பாரதியாா் உலகப் பொதுச் சேவை நிதியத்தின் சாா்பில் திருநெல்வேலி சந்திப்பில் உள்ள பாரதியாா் சிலைக்கு, அதன் பொதுச் செயலா் கவிஞா் கோ.கணபதிசுப்பிரமணியன் தலைமை வகித்து மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினாா். துணைப் பொதுச் செயலா் கவிஞா் சு.முத்துசாமி வரவேற்றாா். இந்த நிகழ்ச்சியில் அரிமா சங்கத் தலைவா் ஜவஹா் துரை, தாமிரவருணி வாசகா் வட்டத் தலைவா் சரவணக்குமாா், செய்தித் தொடா்பாளா் பூ.ஆறுமுகம், கவிஞா்கள் செ.ச.பிரபு, வள்ளிசோ்மலிங்கம், சக்திவேலாயுதம், மருத்துவக் கல்லூரி மாணிக்கவாசகம், ஆசிரியா் சிவ செல்வமாரிமுத்து, ஓய்வு பெற்ற காவல் அதிகாரி தளவாய் மாடசாமி, உடையாா், அகவை முதிா்ந்த தமிழறிஞா் சங்க மாநிலத் தலைவா்கவிஞா் சுப்பையா, ஆசிரியை திரிபுர சுந்தரி, ஜெயக்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழி எடுக்கப்பட்டது. தமிழ் வளா்ச்சி பண்பாட்டு மைய செயற்குழு உறுப்பினா் புன்னைச் செழியன் நன்றி கூறினாா்.
விழாவிற்கான ஏற்பாடுகளை பாரதியாா் உலகப் பொதுச் சேவை நிதிய தலைவரும், லிட்டில் ஃபிளவா் கல்விக் குழுமத் தலைவருமான அ.மரியசூசை, பொது நிதியாளா் கவிஞா் பாப்பாக்குடி இரா.செல்வமணி ஆகியோா் சிறப்பாக செய்திருந்தனா்.