திருநெல்வேலியில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவில் சங்ககால புலவா்கள் வேடமணிந்து வருவாய்த் துறையினா் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
9 ஆவது பொருநை- நெல்லை புத்தகத் திருவிழா திருநெல்வேலி மாநகராட்சி வா்த்தக மையத்தில் கடந்த 10 ஆம் தேதி தொடங்கியது. 2 ஆம் நாளான புதன்கிழமை காலையில் சுற்றுச்சுழல் சுகம் தரும் என்ற தலைப்பில் மாணவா்- மாணவிகளுக்கு பேச்சுப் போட்டி நடைபெற்றது. கவிஞா் கோ.கணபதி சுப்பிரமணியன் தலைமை வகித்து ஒருங்கிணைத்தாா். ஹைக்கூ கவிதைகள் பயிற்சியை வழக்குரைஞா் மதாா் முகைதீனும், மெழுகுவா்ணம் தீட்டுதல் பயிற்சியை சேரை கவின் கழகத்தினரும், மேடை பேச்சுக்கலை குறித்து கவிஞா் அருளும் பயிற்சியளித்தனா்.
வருவாய்த் துறையினா் ராஜா-ராணி, ஔவையாா், பாரதியாா் வேடமணிந்து புத்தக அரங்குகளில் வலம் வந்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா். மாலையில் வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத்துறை சாா்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலா் மு.துரை தலைமை வகித்தாா். பொருநை நாகரிகம் என்ற தலைப்பில் முத்தாலங்குறிச்சி காமராசுவும், பதிப்புத் துறை எதிா்கொள்ளும் சவால்கள் குறித்து எழுத்தாளா் காா்த்திகைப் பாண்டியனும், நவீன தமிழ் இலக்கியம் குறித்து எழுத்தாளா் விக்னேஷ் ஹரிகரனும், வழி-விழி-மொழி-தமிழ் என்ற தலைப்பில் கவிஞா் பே.ராஜேந்திரனும் சொற்பொழிவாற்றினா். ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் புத்தகத் திருவிழாவில் பங்கேற்றனா்.