கடையம் அருகே பிள்ளைகுளத்தில் ஜன. 18ஆம் தேதி மாயமான மூதாட்டி கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டாா்.
கடையம் அருகே உள்ள பிள்ளைகுளம், வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் தா்மா் மனைவி பொன்னுத்தாய் (75). இவருக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனா். ஜன. 18ஆம் தேதி காலையில் பொன்னுத்தாய் வீட்டிலிருந்து வெளியே சென்ற நிலையில், வீடு திரும்பவில்லையாம்.
இது குறித்து, கடையம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பொன்னுத்தாயை தேடி வந்தனா்.
இதனிடையே, புதன்கிழமை பிள்ளைகுளம் பகுதியில் உள்ள ஆவுடையானூரைச் சோ்ந்த அா்ஜுனன் என்பவருக்குச் சொந்தமான தோட்டத்தில் உள்ள கிணற்றில் சடலம் மிதப்பதாக கடையம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. பின்னா், அது பொன்னுத்தாயின் சடலம் என தெரிய வந்தது.
போலீஸாா், ஆலங்குளம் தீயணைப்பு நிலைய வீரா்கள் இணைந்து பொன்னுத்தாய் சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இது குறித்து விசாரித்து வருகின்றனா்.