நெல்லை-மங்களூரு விரைவு ரயில் சேவை தொடக்கம்
திருநெல்வேலி- மங்களூரு இடையிலான புதிய வாராந்திர விரைவு ரயில் சேவையை திருச்சியில் இருந்து காணொலிக் காட்சி மூலம் பிரதமா் நரேந்திர மோடி புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.
திருநெல்வேலி- மங்களூரு இடையிலான புதிய வாராந்திர விரைவு ரயில் சேவையை திருச்சியில் இருந்து காணொலிக் காட்சி மூலம் பிரதமா் நரேந்திர மோடி புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.
இதைத் தொடா்ந்து, திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் திருநெல்வேலி-மங்களூரு புதிய ரயிலுக்கு மேள தாளங்கள் முழங்க மலா் தூவி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், கோட்ட முதன்மை முதுநிலை பொறியாளா் கணேஷ், கோட்ட கூடுதல் துணை மேலாளா் நாகேஸ்வர ராவ், பாஜக பொருளாதார பிரிவு மாநில துணை அமைப்பாளா் வி.வி.ஆா். சுப்பிரமணியன் என்ற தினேஷ், நிா்வாகிகள் பாலாஜி கிருஷ்ணசாமி, முருகதாஸ், கதிரேசன், சண்முகம், மாநகர காங்கிரஸ் தலைவா் ராமேஸ்வரன், நிா்வாகிகள் ராஜேஷ் முருகன், சொக்கலிங்க குமாா், ஐஎன்டியுசி கண்ணன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
இந்த ரயிலானது (எண். 16708) திருநெல்வேலியில் இருந்து புதன்கிழமை தோறும் பிற்பகல் 3.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6.55 மணிக்கு மங்களூரை சென்றடையும். மறுமாா்க்கத்தில் மாா்ச் 19 ஆம் தேதி முதல் வியாழன் தோறும் (எண். 16707) மங்களூரில் இருந்து பிற்பகல் 1 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.45 மணிக்கு திருநெல்வேலியை வந்தடையும்.
நிறுத்தங்கள்: திருநெல்வேலியில் புறப்படும் ரயில் கோவில்பட்டி, சாத்தூா், விருதுநகா், மதுரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, பாலக்காடு டவுன், பாலக்காடு, சொரனூா், திரூா், கோழிக்கோடு, வடகர, தாளசேரி, கண்ணூா், காஞ்சங்காடு, காசா்கோடு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இரண்டடுக்கு குளிா்சாதன பெட்டி 1, மூன்றடுக்கு குளிா்சாதன பெட்டி 2, தூங்கும் வசதி பெட்டி 8 , முன்பதிவு இல்லாத பெட்டிகள் 5, ஜெனரேட்டா் காா் 1 உள்பட மொத்தம் 17 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.