அபாய நிலையில் உள்ள பள்ளி கட்டடங்களை இடித்து மறுசீரமைக்க முடிவு
சாத்தான்குளம் ஒன்றியத்தில் அபாய நிலையில் காணப்படும் பள்ளிக் கட்டடங்களை இடித்து மறு சீரமைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக ஒன்றிய ஆணையர் நாகராஜன் தெரிவித்தார்.
சாத்தான்குளம் ஒன்றியத்தில் அபாய நிலையில் காணப்படும் பள்ளிக் கட்டடங்களை இடித்து மறு சீரமைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக ஒன்றிய ஆணையர் நாகராஜன் தெரிவித்தார்.
சாத்தான்குளம் ஒன்றியத்தில் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் கட்டடங்கள் பழைமையானதாக இருப்பதால் அவை பாழுதடைந்து இடிந்து விழுந்து சேதம் ஏற்படுத்தும் நிலையில் உள்ளதாக புகார் வந்தது. இதையடுத்து சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அபாய நிலையில் காணப்படும் பள்ளி கட்டடங்களை இடித்து மறுசீரமைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
ஆணையாளர் நாகராஜன் தலைமை வகித்தார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரஞ்சித் வரவேற்றார். இதில் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் சாமுவேல் பேசினார். அதில் பனைவிளை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, அதே பள்ளி ஒட்டு கட்டடம், உசரத்துக்குடியிருப்பு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, சாஸ்தாவிநல்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, பன்னம்பாறை வள்ளியம்மாள்புரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, செட்டிக்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகிய பள்ளிகளில் அபாய நிலையில் உள்ள கட்டடங்களை இடித்து புதிதாக சீரமைப்பது என முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் சாமுவேல், ஆணையர் நாகராஜன் ஆகியோர் அபாய கட்டடங்களை பார்வையிட்டனர். இதில் உடன்குடி தொடக்கக் கல்வி அலுவலர் நம்பித்துரை மற்றும் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.