நன்னீர் அலங்கார மீன் தொழில் வாய்ப்புகள்:மீனவப் பெண்கள் விண்ணப்பிக்கலாம்
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சுயஉதவிக் குழு மீனவப் பெண்கள் நன்னீர் அலங்கார மீன் தொழில்வாய்ப்புகள் பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சுயஉதவிக் குழு மீனவப் பெண்கள் நன்னீர் அலங்கார மீன் தொழில்வாய்ப்புகள் பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் கோ. சுகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் ஹைதராபாத்தில் உள்ள தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியத்தின் நிதியுதவியுடன் ஏப். 18ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை "நன்னீர் அலங்கார மீன் தொழில் வாய்ப்புகள் மூலம் சுயஉதவிக் குழு மீனவப் பெண்களை மேம்படுத்துதல்" தொடர்பான மூன்று நாள் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.
கல்லூரியின் மீன்வள விரிவாக்கம், பொருளியியல் மற்றும் புள்ளியியல் துறை மூலம் நடத்தப்படும் இந்தப் பயிற்சியில் பல்வேறு முக்கிய நன்னீர் அலங்கார மீன் இனங்கள், முட்டை மற்றும் குட்டி ஈனும் அலங்கார மீன் இனங்களின் இனப்பெருக்கம், அலங்கார மீன்வளர்ப்பு உபகரணங்கள், அலங்கார மீன்களுக்கான உயிர் உணவுகள், நீர்த் தரக்கட்டுப்பாடு, செயற்கை உணவு தயாரித்தல், கண்ணாடித் தொட்டி அமைத்தல், நோய் மேலாண்மை, பொருளாதாரம் மற்றும் சிறந்த பண்ணை மேலாண்மை குறித்த தொழில்நுட்பங்கள் செயல்முறை விளக்கங்களோடு நடத்தப்பட உள்ளன.
அலங்கார மீன்வளர்ப்பில் ஆர்வமுள்ள சுயஉதவிக்குழு மீனவப் பெண்கள் தங்களது பெயர்களை ஏப். 17ஆம் தேதிக்குள் 7708185570 என்ற செல்லிடப்பேசி எண்ணிலும், 0461-2340554 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யலாம். மின்னஞ்சல் மூலம் பதிவு செய்ய விரும்புவோர் MAMAHESWARI@TNFU.AC.IN என்ற முகவரியில் தொடர்பு கொள்ளவும் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.